×

முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழு ஆய்வு: இன்று மாலை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழு முதன்முறையாக இன்று ஆய்வு செய்தனர். மாலையில் இருமாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பை ஆய்வு செய்யும் பணி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரியாறு அணையை ஆய்வு செய்ய, ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் தமிழக, கேரள அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் முதன்முறையாக அணையில் இன்று ஆய்வு செய்தனர். இன்று காலை ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில், ஆணைய உறுப்பினர் விவேக் திரிபாதி, தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நீர்வள துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம்சர்மா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமை செயலாளர் டிங்கு பிஸ்வால், தலைமை பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் ஆராய்ச்சி மைய அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் ராகுல் குமார் சிங், உதவி பேராசிரியர் கிரிதர், தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் விபோர், பஹல் ஆகியோர் இன்று காலை தேக்கடி படகுத்துறை வழியாக பெரியாறு அணை பகுதிக்கு சென்றனர்.

அங்கு பிரதான அணை, பேபி அணை, சுரங்க பகுதி, நீர்வழி போக்கிகள் மற்றும் மதகுகளை இயக்கி ஆய்வு செய்தனர். மேலும், பெரியாறு அணையின் பலம் மற்றும் பராமரிப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்கு பின்னர் குமுளி 1ம் மைல்லில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் மாலையில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அது தொடர்பான விபரங்களை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

 

The post முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழு ஆய்வு: இன்று மாலை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : MULLIPYRIYARU DAM ,Koodalur ,Mullaipperiyaru Dam ,Supreme Court ,Mullipiyaru Dam ,Mullaipperyaru Dam ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தில் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் திருட்டு