×

மகளிர் நலம் நாடும் இயன்முறை சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

மார்ச் 8ம்‌ தேதி உலக மகளிர் தினம். வழக்கம் போல ஒரே நிற உடுப்புகள் அல்லது வண்ண வண்ண ஆடைகள் அணிந்து லஞ்ச், டின்னர்‌ என சக பெண்களுடன் இணைந்து இந்த தினத்தை சிறப்பாக்க முயலுவோம். மகளிர் கல்லூரிகளிலும் சிறப்பு விழாவாக கொண்டாடப்படும்.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!”
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பிள்ளை காண் என்று
கும்மியடி’’
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”.

என்று பல மேற்கோள்களைக் காட்டி பெண்ணே சிறந்த படைப்பு , சிங்கப் பெண் என்ற பல வலிமையான பட்டங்களை அள்ளித்தரும் நாளாகவும் அமையும். இவையெல்லாம் பெண்ணின் சிறப்பைப் பற்றி ஆண்கள் எழுதிய கவிதைகள், செய்யுள்கள். வழக்கமாக வைரலான / வைரலாகும் ஆஸ்திரேலிய பெண்ணிய எழுத்தாளர் G.D.ஆண்டர்சனின் மேற்கோள்,
“Feminism is not about making women stronger. Women are already strong. It is about changing the way the world perceives that strength”. அதாவது பெண்ணியம் என்பது பெண்களை வலுவாக்குவது அல்ல, பெண்கள் ஏற்கனவே வலுவானவர்கள். அவர்கள் வலுவை உலகம் உணரும் விதமாக மாற்றுவதுதான்.

குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்ட இந்த எழுத்தாளர் பல பரிசோதனைகள் மருத்துவம் என்ற பல சோதனை கட்டங்களைத் தாண்டி இரண்டாவது முறை அவருடைய ஒரு ஆப்பிரிக்க பயணமும் அவரை சிறந்த பெண்ணியவாதியாகவும் எழுத்தாளராகவும் ஆக்கியது எனலாம்.ஆனால் இந்த பயணத்திற்கு முன்னமே அவர் இந்த மேற்கோளை எழுதியுள்ளார். இன்று வரை இந்த மேற்கோள் தான் இணையத்திலே விரவிக் கிடக்கிறது.

ஒரு பெண்ணாக தனது சகோதரியுடன் மேற்கொண்ட ஆப்பிரிக்க பயணத்தில் மாதவிடாயின்போது பெண்களின் அவஸ்தையையும், ஒரு நாளைக்கு , ஒரு பீரியர்ட் நாப்கின்கூட வாங்கி உபயோகிக்க இயலாத பிற பெண்களின் நிலையையும் கண்ட அவரின் வாழ்க்கை பயணத்தையும் அதன்பின் அவரது சேவைகளையும் இணையத்தில் தேடினால் கூட அறிந்து கொள்ளலாம். இது போன்று பெண்களின் பல பிரச்னைகள், உடல்நலன்கள், இன்றுவரை சமூகத்தில் வெளிப்படையாக பேச இயலாத நிலையில்தான் உள்ளோம்.

இவற்றை மகப்பேறு மற்றும் மகளிர் நல பிசியோதெரபியில் “Silent sufferings ” என்போம். கை, கால், மூட்டு எலும்பிற்குதானே இதுவரை பிசியோதெரபி சிகிச்சையைப் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் மகளிர் நலம் என்றால் பிரசவத்திற்கு முன் பின் சொல்லிக்கொடுக்கும் பயிற்சிகளா என்றொரு சந்தேகம் தோன்றலாம்.

மகளிர்நல இயன்முறை சிகிச்சை என்பது பிஸியோதெரபியில் பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த சிறப்பு சிகிச்சை பிரிவாகும்.இது பெண்களின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மூன்று பரந்த படிகளை உள்ளடக்கியது.

1. சிகிச்சை பெற வருபவரின் தற்போதைய நிலை/பிரச்னையின் மதிப்பீடு அல்லது மதிப்பீடு (Assessment and evaluation)

2. உங்கள் தேவைகள் மற்றும் வரம்புகளின் அடிப்படையில் சிகிச்சை( treatment based on your requirement and limitations),

3. மேலும் சிக்கல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் (to prevent further complications).

இச்சிகிச்சையானது பெண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதோடு அல்லாமல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு திட்டம் / பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறது. பொதுவாக நாம் பார்த்து படித்து கண்டறிந்தது பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பொதுவாக செய்யும் உடற்பயிற்சிகள் மட்டுமானதாக இருக்கும். ஆனால், மகப்பேற்றின்‌போதும் அதன் முன்பும், பின்பும் பெண்கள் சந்திக்கும்‌ பிரச்னைகளான,

1.சிறுநீர் கசிவு (Urinary incontinence)

2.யோனி தளர்வு (Vaginal laxity)

3.யோனி இறுக்கம் (Vaginismus)

இவற்றை பொதுவாக இடுப்பு தள தசை /தசைநார்கள் செயலிழப்பு என்போம் (Pelvic Floor Dysfunction) இவற்றிற்கான சிகிச்சை இடுப்புத் தள தசை மறுவாழ்வு பயிற்சிகள் (Pelvic floor Rehabilitation) என்றழைக்கப்படும்.

இடுப்புத்தள தசைகள் மற்றும் தசைநார்கள்(Pelvic floor muscles and ligaments):
நமது உடலின் இடுப்பானது இரண்டு இடுப்பு எலும்புகள் மற்றும் முதுகெலும்பின் கடைசி எலும்பினாலும் சூழப்பட்டது. இவற்றிற்கிடையேதான் நமது சிறுநீர்ப்பை, இனப்பெருக்க உறுப்புக்கள் மற்றும் மலக்குடல் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

இவற்றைத் தாங்கிப் பிடித்தவாறு அடித்தளத்தில் அமைந்துள்ளதுதான் ‘இடுப்பு தள தசைகள் (Pelvic floor Muscles)’ மற்றும் தசை நார்கள் (ligaments).உடலின் மற்ற தசைகளைப் போலவே இந்த தசைகளிலும் பல்வேறு காரணிகளால் தசை இறுக்கம், தசைத்தளர்வு போன்றவை ஏற்படும்.

1. சிறுநீர் கசிவு (Urinary incontinence):

இந்தியாவில் 20-45% பெண்கள் சிறுநீர் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் ஆகஸ்ட் 2005 – ஜூன் 2007 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையின் பதிவுகளின்படி 50% குழந்தை பிறப்பிற்கு பின்னர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டில் ஒரு பெண்ணிற்கு இந்த பிரச்னை உள்ளதாகவும், பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும் இது தங்களோடு வாழ்வியலோடு கலந்தது என்று இது குறித்து வெளிப்படையாக பேசவோ இல்லை அதற்கான மருத்துவமோ எடுத்துக் கொள்வது இல்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.
காரணங்கள்:

பொதுவான சில காரணங்கள்,

* கர்ப்பம் மற்றும் பிரசவம் ( Pregnancy and Child birth).
* கர்ப்பத்தில் குழந்தையின் அதிக எடை
* வயது மூப்பு (Aging)
* மெனோபாஸ் (Menopause)
* சிறுநீர் தொற்று (Urinary Tract Infection)
* மலச்சிக்கல் ( Constipation)
* தீவிரமான இருமல் ( Chronic cough)
* இடுப்பு உறுப்புகள் தொய்வு (Pelvic organ prolapse).
* நரம்பியல் வியாதிகள் ( Neurological conditions).

2. யோனி தளர்வு ( Vaginal laxity):

இயற்கையாகவே வயது மூப்பு அடைய அடைய யோனி தளர்வு ஏற்படும். அதைத் தவிர்த்த சில காரணங்கள்,

* கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு
* வயது மூப்பு
* மெனோபாஸ்.
பொதுவாக கர்ப்பத்தின்போது குழந்தையின் அதிக உடல் எடையை தாங்க வேண்டி இடுப்பு தசைகள் மற்றும் இடுப்பு தள தசைகளில் , தசை நார்களில் தளர்வு ஏற்படும்.

மேலும்‌ பிரசவத்தின் அதிக எடை கொண்ட குழந்தை பிறப்பு , ஃபோர்செப்ஸ் டெலிவரி போன்ற காரணங்களாலும் தொய்வு ஏற்படும்.

மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் யோனி திசுக்களின் வளர்ச்சி மாற்றங்கள் குறைவதாலும் தளர்ச்சி அல்லது தொய்வு உண்டாகும்.

3. யோனி இறுக்கம் (Vaginismus):

சில உளவியல் புறக்காரணிகள் மற்றும் உடல் சார்ந்த காரணிகளால் யோனி தசை இறுக்கம் உண்டாகிறது. இதற்கு தசை தளர்வு பயிற்சிகள், dialtors போன்ற உபகரணங்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவை மட்டும் அல்லாது மலக்கசிவு, மலச்சிக்கல் போன்றவற்றால் இத்தசைகளுக்கு பாதிக்கப்பட்டால் அவற்றிற்கான சிகிச்சை மற்றும் தசைப்பயிற்சிகளும்
கற்பிக்கப்படுகிறது.

இடுப்புத் தள தசை மறுவாழ்வு சிகிச்சை(pelvic floor muscles Rehabilitation)மட்டும் அல்லாது வேறு சில சிகிச்சை முறைகளும் மகளிர்நல சிறப்பு பிசியோதெரபி பிரிவில் உள்ளது.

* கர்ப்பகால உடற்பயிற்சிகள் ( Ante natal – Post natal excercise)
* கர்ப்பகாலம் தொடர்பான சில பிரச்னைகள் (Pregnancy related concerns)
* பிரசவகால சிகிச்சை (labour pain management )
* இடுப்பு வலி (pelvic pain).
* மெனோபாஸ் மேலாண்மை (Menopause management )
* மார்பகப் புற்றுநோய்‌ / கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகான மறுவாழ்வு பயிற்சிகள்.
* வயிற்றுத் தசை பிளவு ( Diastasis recti).
* பாலியல் செயல்பிறழ்ச்சி (Sexual dysfunction eg. dyspareunia)

மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் பெண்களுக்கான பல சமூக மற்றும் சுகாதார நலத்திட்டங்களை வகுத்துள்ளனர்.தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. சென்னை மேயர் 2024-2025 நிதிநிலை அறிக்கையில் பெருநகர பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு 39 இடங்களில் இலவச பெண்கள் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுவதைப் பற்றி கூறியிருந்தார்.

அரசு மட்டும் முயற்சி எடுத்தால் போதாது, கல்வியறிவு பெற்ற பெண்கள் பலரும் கூட தங்களின் ஆரோக்கியத்தை பற்றி பேசத் தயங்கும் விசயங்களை பற்றி இந்த மகளிர் தினத்தில் இருந்து நாம் நம் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் அதிகம் விவாதிக்க வேண்டியது மட்டுமல்லாமல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயலுவோம்.

“புள்ளப் பெத்தால் அப்படித்தான் இருக்கும்”, ‘‘பொம்பிளைனா இதெல்லாம் அனுபவித்துதான் ஆகணும்’’ என்ற ஒற்றை வரிகளில் நம் உடல் உபாதைகளை ஓரங்கட்டி விடாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெறுவோம்.

The post மகளிர் நலம் நாடும் இயன்முறை சிகிச்சை! appeared first on Dinakaran.

Tags : Krishnaveni ,World Women's Day ,Dinakaran ,
× RELATED வலியை வெல்வோம்!