×

சிறுகதை-விழிகள் தேடிய மத்தாப்பு!

நன்றி குங்குமம் தோழி

கடல் அலைகள் மேலே எழும்பி தொடர்ந்து கரையைத் தொட்டது. உச்சி வெயில் என்றும் பாராமல் விடா முயற்சியுடன் சிப்பிகள் பொறுக்கிய சிறுமி, அருகே கரையில் அமர்ந்திருந்த இளம் யுவதியிடம், ‘‘அக்கா உங்களுக்கு சிப்பி வேணுமா?’’ என்று கேட்டாள். ‘‘வேண்டாம் பாப்பா’’ என்று தலையை அசைத்தவள் கண்களில் சோகம் படிந்திருந்தது. கடற்கரையில் அதிகமாக கூட்டமே இல்லை. அதனால் மனபாரம் தாங்க முடியாமல் கடற்கரைக்கு வந்தாள். அவளுக்கு எப்பொழுதெல்லாம் மனம் வலிக்கிறதோ அப்பொழுது கடல் மாதாவின் கரையை நாடி வந்து அமர்ந்து கொண்டு கடல் அலையையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து கரையைத் தொடும். முதலில் பெண்அலை கோப ஆவேசத்தோடு ஓடிவரும். பின் தொடர்ந்து ஆண் அலை தொடர்ந்து வந்து சமாதானம் செய்ய முயற்சிக்கும். எப்பொழுது ஆண்அலை பெண் அலையை தொட்டு விடுமோ அன்று உலகமே அழிந்து விடும் என்று நாட்டுப்புற கதையாகத் தன்னுடைய பாட்டி கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
பெற்றோரை இழந்து அண்ணன் ஆதரவில் வாழ்பவள்.

அண்ணன் ரகு தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஜூனியர் கிளார்க் ரஞ்சினியை காதலித்து அவளுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டான். ஆரம்பத்தில் ஒருவர் மீது ஒருவர் ஆசையோடும் பாசத்தோடும் இருந்தனர். ஐந்தாம் மாதத்தில் தொடங்கியது அவர்களிடையே சிறு பூசல்கள்… அந்தப் பூசல் ஏற்றத்தாழ்வுகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து வார்த்தைகள் தடித்து பேச்சு வளர்ந்து கொண்டே சென்றதே தவிர, ஒரு நிலைக்கு வரவே இல்லை.எப்பொழுது எதற்காக சண்டை போடுவார்கள் காரணமே புரியாது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

வீட்டிற்கு அருகே கடற்கரை இருப்பதினால் ஐந்து நிமிடத்தில் வீடு திரும்பிவிடலாம். தனிமையும், அமைதியும் நாடும் பொழுது இந்த கடற்கரையில் வந்து அமர்ந்து கொள்வாள்.
‘‘அம்மா, பானையை விடுங்க… கீழே விடுங்கம்மா’’… கண்ணீருடன் தன் அம்மாவிடம் கெஞ்சினான் ஓர் ஆண்மகன். கண்ணீர் சிந்திய படி ‘‘என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டீங்களே? ஏங்க இப்படி பண்ணீங்க? என்ன தனியா விட்டுட்டுப் போக உங்களுக்கு எப்படிங்க மனசு வந்தது? நான் ஒத்த பொம்பளையா எத்தனை காரியங்களை சாதிக்க முடியும்? சொல்லுங்க
பார்ப்போம்’’ என்று கதறினாள்.

அழுகை சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் காஞ்சனா.ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியை தாங்கி இளைஞன் நின்று இருந்தான். கண்களில் சொல்ல முடியாத அளவு துக்கம் முகத்தில் குடி கொண்டிருந்தது. இளைஞன் பெண்மணியின் அழுகையை கண்டு தாங்க முடியாமல் தவித்தான். காஞ்சனா ஓடிச் சென்று பெண்மணியைத் தாங்கினாள். செய்வதறியாது திகைத்தவனுக்கு காஞ்சனா அன்னையைத் தாங்கியது ஆறுதலை அளித்தது. ‘‘அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்தா மாத்திரை போடணும்’’ என்று கூறியபடி பாக்கெட்டில் இருந்து மாத்திரையை எடுத்துக் கொடுத்தான்.

காஞ்சனா, அந்தப் பெண்மணியின் உடலை தன் மீது ஆதரவுடன் தாங்கிக் கொண்டு வாய் திறக்க வைத்து மாத்திரையை போட்டு ஹேண்ட் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து பருகுவதற்கு தண்ணீரையும் கொடுத்தாள். சற்று நேரத்தில் விழித்த பெண்மணி, காஞ்சனாவின் முகத்தில் தெரிந்த சாந்தம், பொறுமையைக் கண்டு ‘‘ஏன்…ம்மா நீ இந்த ஜன நடமாட்டம் இல்லாத வேகாத வெயில் நேரத்தில் வந்திருக்கே’’ என்ற கேள்வியை எழுப்பினாள்.

வீட்டுச் சூழலில் சொல்ல தயங்கினாள். பெரியவள் அவள் முகத்தில் படிந்த சோகத்தைப் படித்தறிந்தது போல கவனித்தாள். அன்போடு இருக்க வேண்டிய அண்ணன், அண்ணி தகராறு… அதனால் வார்த்தைகளை முடிக்கவில்லை.புரிந்து கொண்டவள், ‘‘சரி விடுமா வீட்டுக்கு வீடு வாசப்படிதானே’’ என்று கூறி மேற்கொண்டு அவள் மனதை புண்படுத்த விரும்பாமல் பொதுவான பேச்சை பேசத் தொடங்கினர்.

‘‘இவன் என் மகன் நரேஷ் பாபு… இவனுடைய தந்தை மாரடைப்பால் திடீரென்று இறந்து விட்டார். அவருடைய அஸ்தியை கடலில் கலக்கத்தான் இங்கே வந்திருக்கிறோம்’’ என்று கூறி அழுதாள். அவளை ஒருவிதமாக சமாதானம் செய்து, ‘‘அம்மா அழுவாதீங்க… உங்களுக்கு உங்க மகன் பக்கத்துணை இருப்பார்’’ என்று ஆறுதல் வார்த்தையில் கூறி தேற்றினாள்.
சற்று நேரம் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிமுகப்படலம் முடித்துக் கொண்டு கிளம்பினர். அதன் பிறகு எங்கேயுமே சந்திக்கவும் இல்லை… அதைப் பற்றிய ஞாபகம் எதுவும் இல்லை.

ஒரு மாதத்திற்கு பின் சூப்பர் மார்க்கெட்டில் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கும் பொழுது கடற்கரையில் சந்தித்த வாலிபனை சந்தித்தாள். அவனிடம் வலிந்து பேச பிடிக்காமல் ஒதுங்கியே சென்றாள். ஆனால், அவன் பார்த்து விட… ‘‘ஹலோ! காஞ்சனா என்னை பார்க்காமல் போனா எப்படி?’’ என அவள் அருகே வந்தான்.‘‘நான் கவனிக்கவில்லை…’’ தடுமாறி திக்கினாள். பொய் சொன்னாள் காஞ்சனா. ‘‘அட, நீ என்னைப் பார்த்ததை அதோ அந்தக் கண்ணாடி வழியே நானும் பார்த்தேன்’’ என்று சுட்டிக்காட்டினான். அதற்கு மேல் பொய் சொல்லத் தோன்றாமல் அசடு வழிந்தவள், ‘‘சரி இப்போ என்ன செய்ய?’’ ‘‘காபி சாப்பிடணும்’’… ‘‘என்னது?’’ ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.

‘‘ஐயோ அம்மா தாயே, என் கூட இல்ல… அம்மா கூட காபி சாப்பிடணும்… அங்கே காரில் அமர்ந்திருக்கிறார்…’’ காது கேளாதவர்களிடம் பேசுவது போல ஜாடை
செய்தான். பக்கென வாய்விட்டு கலகலன்னு சிரித்தாள். அதன் பின்பு அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். அத்தனை சந்திப்புகளும் திட்டம் போட்டு சந்தித்த சந்திப்புகள் இல்லை… எதிர்பாராமல் யதேச்சையாக நடந்த நிகழ்ச்சி. ‘‘காஞ்சனா! வாவ்… இந்த சுடிதார் உன் நிறத்திற்கு எடுப்பாக இருக்கு, இந்த ட்ராப் கம்பல் உன் காதுக்கு நல்லா இருக்கு’’ என்று ஒவ்வொன்றையும் பாராட்டினான்.

‘‘ஓ! அப்படியா’’… என்றாளே தவிர மறந்தும் பதில் அளிக்கவில்லை. ‘‘நான் சுத்தி வளைக்காமல் நேராகவே கேட்கிறேன் காஞ்சனா’’ என்று கூறியதும்… அவள் உள்ளத்தில் ரயில் ஓடியது…
‘‘ம்… கேளுங்க’’ என மெல்லப் பேசினாள். ‘‘காஞ்சனா… எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கு… கல்யாணம் செய்து கொள்ளலாமா?’’ ‘‘வேண்டாம் சார்…’’

‘‘நரேஷ் பாபு என்று அழைக்கலாம்… ஏன் சார் நூர் மோர் என்று அழைக்கிறீங்க… லேசாக புருவத்தை தூக்கி கடுப்பானான். ‘‘எனக்கு வீட்ல மாப்பிள்ளை தேடுறாங்க…’’ கண்களில் சோகம் நிழலாடியது.

‘‘உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’’
‘‘நரேஷ் வந்து வந்…து பிடிச்சிருக்கு…’’
‘‘பின்ன என்ன கல்யாணத்திற்கு
தயாராகுங்க?’’

‘‘யோசிக்க நாள் கொடுங்களேன்…’’ லேசாக கண்கலங்கி அவன் முகத்தை ஏறெடுத்து பார்த்தாள்.‘‘ஹூ… ஹூ… அப்போ அம்மா மனசுல ஐயாவுக்கு இடம் இருக்கு…’’ குரல் எடுத்து சிரித்தான்.
‘‘அண்ணன், அண்ணி காதலிச்சு கல்யாணம் ஆனவங்க… மோகம், ஆசையெல்லாம் தீர்ந்து போச்சு… எப்பவும் சண்ட தான். காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை…’’ வெறுப்பில் வார்த்தைகளை உதிர்த்தாள். ‘‘காஞ்சனா யாரு காதலிக்க சொன்னது. திருமணம்…’’ வார்த்தைகள் முடிக்கவில்லை… ‘‘வேண்டாம்’’… அவள் இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். விடுக்கென எழுந்து அவனை திரும்பி பார்க்காமல் வீடும் திரும்பினாள். அத்துடன் நரேஷை அவள் மறந்துவிட்டாள். நாட்களும் ஓடியது.

இரவில் நரேஷ் தூங்க விடாமல் தொந்தரவு செய்தான் கனவில். அவனை காண கண்கள் துடித்தது. மனதில் உள்ள ஆசை, வேதனை, துக்கம் மறைக்க கடற்கரையை நாடினாள்.
அங்கு அவளுக்கு முன் நரேஷ் குடையுடன் கரையோரம் வெயிலில் அமர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் மனதிற்குள் ஆயிரம் வண்ணத்தாமரை பூக்கள் பூத்தது.முகத்தில் வண்ணங்கள் அள்ளிப் பூசின போல் இருந்தது.

‘‘காஞ்சனா! சிவப்பு தாமரை பூத்திருக்கே…’’
‘‘பூவா எங்கே?’’ ‘‘கன்னத்தில்தான்’’ எனச் சுட்டு விரலால் அவள் கன்னத்தை தொட்டான்.நாணத்தால் மேலும் சிவக்க… அவன் அருகே அமர்ந்தாள். ‘‘நான் இங்கே
இருப்பேன் என்று எப்படி தெரியும்?’’‘‘காஞ்சனா! காதலிக்கத் தொடங்கியவன் முதல் வேலையே காதலியின் முழு விவரத்தையும் திரட்டுவதே… அவளுக்கு பிடித்தது, பிடிக்காதது, ரசிப்பது, வெறுப்பது இப்படி பல விஷயங்கள்…’’ ‘‘நல்லா சொன்னீங்க…’’ லேசாக இதழ் விரித்தாள். ‘‘காஞ்சனா உன் கன்னச் சிவப்பு எனக்கு சாதகமான பதிலா கிடைத்திருக்கு…’’
‘‘ எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனா, கல்யாணம் வேண்டாம்’’ என்று பிடிவாதம் பிடித்தாள் காஞ்சனா.

‘‘பொழுது போக்குக்கு உன்னுடன் பழகல… என் தந்தை அஸ்தியை கடலில் கலக்கும் போது நீ என் முன் தென்பட்டாய்…உன் முதல் பார்வையே எனக்குப் பிடிச்சு போச்சு. உன் அண்ணன், அண்ணி காதலிச்சு கல்யாணம் பண்ணினாலும் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இல்லை. நான் அப்படி இல்லை… உனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு வாழ்வேன். அன்பு, காதல் என்பதின் அர்த்தம் ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக் கொடுப்பதே ஆகும். என் அம்மா குடும்பத்தை கோவிலாகக் கட்டி காப்பாத்திட்டு வராங்க… அவருக்கு பின் வரும் மருமகள் அதே பாரம்பரியத்துடனும் பண்பாட்டுடனும் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்குரிய பதில் உன் பார்வையில் கிடைத்தது…’’ என்றான். அந்த சமயத்தில் சுண்டல்கார பையன் சுண்டலை வாங்கிக்குங்க அக்கா எனத் தொல்லை செய்தான்.

உடனே நரேஷ் அவன் தொல்லை தாங்க முடியாமல் டப்பா சுண்டலையும் வாங்கிக் கொண்டு அனுப்பினான்.‘‘காஞ்சனா உன் கையில் இருக்கும் சுண்டலை ஒவ்வொன்றாக கடலில் வீசி ஏறி… கடல் தாய் என் காதலுக்கு பதில் கொடுப்பாள்’’ எனக் கூறி சுண்டல் டப்பாவை அவள் கைகளில் திணித்து விட்டு அவன் கிளம்பினான். அவளும் ஒரே சிந்தனையுடன் சுண்டலை கடலில் வீசினால்… இரவு முழுவதும் தூங்கவிடாமல் கடலில் எறிந்த பட்டாணிகள் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து என ஒன்று திரண்டு அவள் கண் முன் நின்று நரேஷை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தின.இது என்ன லூசு கனவு எனச் சிரிப்பு மூட்ட சிரித்துவிட்டாள், தண்ணீர் குடிக்க வந்தான் அண்ணன் ரகு.

தங்கை காஞ்சனா சிரிப்பதை கண்டான்… ‘‘ஏய் காஞ்சனா…’’ கணவனின் குரல் கேட்டு படுக்கை விட்டு வெளியே வந்தாள் ரஞ்சனி. ‘‘ஏங்க ராத்திரி வேலையில கத்தறீங்க?’’ ‘‘காஞ்சனா லூசு மாதிரி எழுந்து உட்கார்ந்து சிரிக்குது…’’ ‘‘நானும் அந்தக் காலத்துல சிரிச்சேன்… இப்ப தினமும் அழுவுறேன்…’’ என்று தனது குரலை உயர்த்தியவள், ‘‘நம்ம சண்டையை அப்புறம் போடுவோம்… என் ஃப்ரெண்டு ஒரு தகவல் சொன்னா, உங்க தங்கை ஒரு பையன் கூட சுத்தறதாக…’’ ‘‘நிறுத்து…’’ ஆவேசத்தில் கையை உயர்த்தினான்.

காஞ்சனா கண்ணை திறக்காமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள்…

அண்ணனுக்கு தெரிஞ்சுப் போச்சு எனத் துடித்தாள். மறுநாள் நரேஷை சந்திப்பதையே தவிர்த்தாள். ஆனால் அவன் விடவில்லை. ‘‘ஐந்து நிமிடம் பேசிவிட்டு செல்’’ என கையைப் பற்றி அருகே இருந்த காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான் . நேற்று நடந்த நிகழ்ச்சியை சொல்லி பதறினாள்.அதன் பின்பு சில நாட்கள் கழித்து ஒரு நல்ல நாளில் நரேஷ் பாபு அம்மாவுடன் பெண் கேட்டு ரகு வீட்டிற்கு வந்தார்கள்.

சொந்த வீடு, கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் ஐந்து இடங்களில் இருப்பதையும் செல்வச் செழிப்பில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மகன் யாரையும் திருமணம் செய்து கொள்ள மறுத்தான். ஆனால் உன் தங்கை காஞ்சனாவின் பொறுமை, தாய்மை குணம் அவனுக்குப் பிடித்திருக்க எனக்கும் பிடித்திருந்தது. அவளுடைய பண்பும் அடக்கமும் பிடித்துவிட்டது. வளர்த்த வளர்ப்பு தெரிந்தது எனக்கூறி காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டும் என நரேஷ் அன்னை கேட்டதும் ரகு மறுப்பு கூறாமல் ஒத்துக்கொண்டான். அன்று மாலை கடற்கரையில் காஞ்சனாவும் நரேஷ் பாபுவும் சந்தித்தனர்.

‘‘அது என்ன மேஜிக் கடலையை கடலில் போடச் சொன்னீங்க…’’ ‘‘ஒவ்வொரு கடலையையும் தூக்கி நீ வீசும் போது என் நினைவில் உன் மதி உள்ளம் எதையும் கட்டுப்படுத்தும் மனசு முழுவதும் நானே நிறைந்திருப்பேன்… திங்க் பண்ணினேன்… ஒர்க்கவுட் ஆயிடுச்சு’’ என கடல் அழகைப் பார்த்து சிரித்தான். அவர்களுடன் கடல் அலையும் ஆர்ப்பரித்து சிரித்தது!

தொகுப்பு: நீலம் மூன்

 

The post சிறுகதை-விழிகள் தேடிய மத்தாப்பு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,
× RELATED உங்களாலும் முடியும் தோழி!