×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெண்மை நிறம் பூசப்பட்டு, வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம்: வேகமெடுக்கும் திருப்பணிகள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராஜகோபுரத்தில் வெண்மை நிறம் பூசப்பட்டு புதிய வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 15 ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் ஜுலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு ஏப்.26ம் தேதி ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தில் ரூ.16 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக சிதிலமடைந்த சிற்பங்கள் புனரமைக்கப்பட்டதுடன் ராஜ கோபுரத்தில் கீழ்த்தள பகுதிகள், தூண்கள் புதுப்பிக்கும் பணி நடந்தது. இரண்டாம் கட்டமாக ராஜகோபுரத்தின் மேலே உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டு இயற்கை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் 9 கலசங்கள் பொருத்தி அதில் வரகு, நவமணிகள் நிரப்பப்பட்டது.

ராஜகோபுரத்தில் ஏற்கனவே இருந்த சுமார் 40 அடி உயரம் கொண்ட வேல் அகற்றப்பட்டது. புதிதாக சென்னையில் நவீன தொழில்நுட்பத்தில் துருப்பிடிக்காத இரும்பினால் வேல் செய்யப்பட்டு செம்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தில் 6 வது நிலையில் இருந்து 9வது நிலை வரை வேல் பொருத்தப்பட்டுள்ளது. வேலின் மேல் பகுதியில் திருநீறு பட்டை, குங்குமம் பொட்டும், கீழ் பகுதியில் சிவப்பு வண்ணத்தில் ஓம் என்ற வாசகங்களும் உள்ளது. முன்பிருந்ததை விட அதிகளவில் பிரகாசிக்கும் வண்ணம் எல்இடி பல்புகள் உள்ளதால் நகரின் எல்லைக்கு வரும்போதே ராஜகோபுரத்தில் உள்ள வேல்இரவு நேரத்தில் ஒளிமயமாக தோன்றுகிறது.

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்தின் வேல் பொருத்திய முன்பகுதி மேற்கு நோக்கியும், பின்பகுதி கிழக்கே கடலை நோக்கியும் உள்ளது. மற்ற கோயில்களில் ராஜ கோபுரம் அதில் உள்ள சிற்பங்கள் முதலானவை தத்ரூபமாக தெரியும் வகையில் வண்ணமயமாக வர்ணம் பூசப்படும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம் எப்போதுமே வெண்மை நிறத்திலேயே காட்சியளிக்கிறது. கடலுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த கோபுரம் கடல் காற்றினால் அரிக்காத வண்ணம் இயற்கை முறையில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தில் திருப்பணிகள் படிப்படியாக முடிக்கப்பட்டதால் அதில், கட்டப்பட்ட கம்பு சாரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மொத்தத்தில் நீலக் கடலோரத்தில் வெண்மை நிறத்தில் ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதால் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெண்மை நிறம் பூசப்பட்டு, வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம்: வேகமெடுக்கும் திருப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Rajagopuram ,Murugan Temple ,Tiruchendur ,Kumbabhishekam ceremony ,Subramania Swamy Temple ,Tiruchendur… ,
× RELATED திருச்செந்தூர், உடன்குடியில் கிணற்றில் விழுந்த ஆடு, பாம்பு மீட்பு