- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- சென்னை
- மின்சாரம்
- தமிழ்
- தமிழக சட்டமன்றம்
- கோயம்புத்தூர்
- தெற்கு
- வனதி சீனிவாசன்
- பாஜக
- டாஸ்மாக்
- சட்டசபை
- தின மலர்
சென்னை: சோதனை என்ற பெயரில் அவதூறு பரப்ப முயற்சிப்பது ஒரு போதும் ஈடேறாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பொறுக்க முடியாமல், அவப்பெயரை உருவாக்கும் கெட்ட நோக்கத்துடன் ஒரு கட்சி பூதக்கண்ணாடி போட்டு பார்த்தது. ஒன்றுமே கிடைக்கவில்லை. ஒருவர் சாட்டையால் கூட அடித்துக் கொண்டார். கடைசியாக, ஒரு துறையை கையில் வைத்துக் கொண்டு சோதனை என்ற பெயரில் சம்பந்தம் இல்லாத இடத்தில் எல்லாம் சோதனை நடத்தினார்கள்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் சோதனை பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டனர். பட்ஜெட்டில் வரும் திட்டங்கள் மக்களிடம் சென்று அரசுக்கு பாராட்டு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த செய்தி வெளியிடப்படுகிறது. செய்தி வெளியாவதற்கு முன்பதாகவே அதிலுள்ள தகவலை அந்த கட்சியின் தலைவர் கூறினார். எந்த அடிப்படையில், எந்த முதல் தகவலின் அடிப்படையில் அந்த சோதனை நடைபெற்றது என்று நாங்கள் கேட்டோம். அந்த எப்.ஐ.ஆர். எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது? என்றும் கேட்டோம்.
இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. அரசுக்கு அவப்பெயர் கொண்டு வரும் அவர்களின் எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. அவர்கள் சொன்ன கணக்கு, அவர்களின் மனக்கணக்கு. தி.மு.க.வின் கடந்த தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை. படிப்படியாக குறைப்பதாக கூறியுள்ளதாக வானதி பேசினார். அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும், மக்கள் நலன் கருதி 603 டாஸ்மாக் கடைகளை முதல்-அமைச்சர் குறைத்துள்ளார். அறிவிக்கப்பட்டது 500 கடைகள்தான். ஆனால் கூடுதலாக 103 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
The post 603 டாஸ்மாக் கடைகள் மூடல் சோதனை என்ற பெயரில் அவதூறு பரப்ப முயற்சிப்பது ஒரு போதும் ஈடேறாது: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் appeared first on Dinakaran.
