×

சிந்துவெளி நாகரிகத்தை உலகிற்கு வெளிப்படுத்திய சர் ஜான் ஹுபர்ட் மார்ஷலுக்கு சிலை: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் உலகுக்கு வெளிப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹுபர்ட் மார்ஷலின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் 19.3.1876 அன்று பிறந்தார். 1902ம் ஆண்டு தனது 26 வயதில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள் வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.

இந்தியத் துணைக்கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களைப் புரட்டிப் போட்டது இந்த அறிவிப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டார். சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ரீ மூலம் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றுள்ளன. தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறிவதற்கு வித்திட்ட சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் 17.8.1958 அன்று மறைந்தார்.

முன்னதாக சென்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் 5.01.2025 அன்று நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் தலைமையுரை ஆற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்ததன் மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் நிலை நிறுத்தி காட்டியவர் சர் ஜான் மார்ஷல், அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமையாகும் என்றும், சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷலுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும் என்றும் முதல்வர் புகழஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து சர் ஜான் ஹுபர்ட் மார்ஷலுக்கு திருவுருவச்சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். தற்போது இந்த திருவுருவச் சிலையை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

The post சிந்துவெளி நாகரிகத்தை உலகிற்கு வெளிப்படுத்திய சர் ஜான் ஹுபர்ட் மார்ஷலுக்கு சிலை: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Sir John Hubert Marshall ,Indus Valley Civilization ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Director General ,Archaeological Survey ,British India ,Egmore Museum ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...