×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்!!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (19.03.2025) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். சந்திரன், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பால் மனோஜ் பாண்டியன், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சந்திரன் அவர்கள் : திருத்தணி தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அரசு மகளிர் கலைக்கல்லூரி துவக்க அரசு முன்வருமா?

அமைச்சர் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்து சமய அறநிலையத்துறை அறம் சார்ந்த பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக புதிதாக திராவிட மாடல் ஆட்சி நாயகன் பதவி ஏற்றவுடன் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பல்வேறு வகையில் தடுக்கின்ற நோக்கத்தோடு நீதிமன்றங்களில் வழக்குகள் கொடுக்கப்பட்டு வந்தன. பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு நான்கு கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டு தமிழக முதல்வர் அவர்களின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், உணவுத்துறை அமைச்சர் அவர்களின் ஒட்டன்சத்திரம் தொகுதியிலும், சட்டப்பேரவை உறுப்பினர் திரு.ஈஸ்வரன் அவர்களின் திருச்செங்கோடு தொகுதியிலும், சட்டப்பேரவை உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்களின் விளாத்திக்குளம் தொகுதியிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கினால் 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் ஒரு சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் 6 கல்லூரிகளையும் இந்த ஆண்டிற்குள் தொடங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்கிய பிறகு நிச்சயம் திருத்தணிக்கும் ஒரு கல்லூரி ஏற்படுத்தி தரப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி, திரு.நயினார் நாகேந்திரன் போன்றோர் இதுபோன்ற கோரிக்கையினை வைத்துள்ளனர். முதல்வர் அவர்களை நம்பினோர் இதுவரை கெட்டதில்லை, நம்பாமல் கெட்டவர்களின் எண்ணிக்கை தான் நீண்ட வரிசையாக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.சந்திரன் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, வழக்கு முடிவடைந்த பிறகு, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்பட்டு மகளிர் கல்லூரி செயல்படுத்துவோம் என்று தெரிவித்த அமைச்சர் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பிலே நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்த சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் பள்ளிப்பட்டு, ராக்கிப்பட்டு உள்ளிட்ட வட்டங்கள் திருத்தணி 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாலும் கிராமப்புற மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினை அளித்திருக்கின்றார்கள். அவருக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு அறநிலையத்துறையின் சார்பிலே பல்வேறு நல திட்டங்களை தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் செயல்படுத்தக்கூடிய அமைச்சர் அவர்கள் திருத்தணி முருகப்பெருமானின் ஆசியை முழுமையாக பெற்றிட அவருடைய இந்த அறிவிப்பு உதவி புரியும் என்று தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் புத்திசாலித்தனமாக கோரிக்கையை நிறைவேற்ற முற்படுகின்றார். வரவேற்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 கல்லூரிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு அவரது கோரிக்கையை பரிசீலித்து கல்லூரி ஏற்படுத்தப்படும் என்றுதான் அறிவித்திருக்கின்றேன். அதோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமான் ஆசி முழுவதுமாக கிடைக்கும் என்று சொல்லியிருக்கின்றார். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு எடுத்த ஒரு ஆட்சி உண்டென்றால் அது திராவிட மாடல் ஆட்சியாகும். ஆகவே தமிழ் கடவுள் முருகப்பெருமான் முதல்வர் அவர்கள் தலைமையிலான இந்த ஆட்சிக்கு முழுவதுமாக ஆசி வழங்கி கொண்டு இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.சந்திரன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, முருகப்பெருமானின் வாகனம் மயில் என்று கூறப்பட்டாலும், இந்திரன் முருகனின் திருமணத்திற்கு வழங்கப்பட்ட ஐராவத யானை இத்திருத்தலத்தின் வாகனமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு யானை ஒன்று வழங்கிட அரசு முன்வருமா என்பதனை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, அத்திருக்கோயிலுக்கு ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் ஒரு யானை வழங்கப்பட்டது. அந்த பெண் யானை வள்ளி 2010 ஆம் ஆண்டு இறந்துவிட்டபடியால், அந்த யானைக்கு திருக்கோயிலில் மணிமண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. திரு.கிரிதரன் என்பவர் யானையை வாங்கி தானமாக வழங்கிட முன் வந்தார். இந்திய வனத்துறையின் சட்டம் 1972 -ன் படி யானை வாங்குவதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மாண்பமை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு யானைகளை காட்டிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளையானது திருக்கோயிலுக்கு யானைகள் யாரும் வாங்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பிட அரசு செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை பொறுத்த அளவில் இந்த இரண்டு வழக்குகளிலும் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருக்கோயில்களின் வழக்கத்தில் யானைகள் தெய்வத்திற்கு நிகராக போற்றப்படுவதால், அவற்றின் முக்கியத்துவத்தை இரண்டு நீதிமன்றங்களிலும் நாங்கள் மனுவாக தாக்கல் செய்திருக்கின்றோம். நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் அவர் கோரிய அந்த திருக்கோயிலுக்கு யானை நிச்சயமாக உபயதாரர்களால் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. பால் மனோஜ் பாண்டியன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் 2021 ஆம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை ஏற்று ஆலங்குளம் தொகுதியில் உள்ள கடையத்தில் கல்லூரியே இல்லாத பகுதிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி தொடங்க அனுமதி தந்ததற்கு அவருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து, அறிவிக்கப்பட்ட 6 கல்லூரிகளில் இதுவும் உள்ளதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பாக வைத்திருக்கும் கல்லூரியை அவர் ஏற்கனவே சொன்னது போல இந்த ஆண்டு அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதை தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, கேள்வி கேட்ட உறுப்பினரும் ஒரு சிறந்த வழக்கறிஞர் தான். இந்த 10 கல்லூரிகளை அறிவித்த பிறகு இதற்காக நடத்திய சட்டப் போராட்டங்கள், நீண்ட நெடிய நீதிமன்ற படிக்கட்டியிலேயே நாங்கள் ஏறி இறங்கியது கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கு காரணமானவர்களும் இதே அவையில் தான் இருக்கின்றார்கள். முதல்வர் அவர்கள் தற்போது நான்கு கல்லூரிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார். நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கின்ற ஆற்றல் பெற்ற எங்கள் முதல்வர் அவர்களின் சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்ற வார்த்தைக்கு இணங்க உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதற்கு அனைத்து வகையிலும் முயற்சியினை இந்த ஆட்சி எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி. செந்தில்குமார் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்தவுடன் பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு 38 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் 24 மாதங்களில் சித்த மருத்துவமனை அங்கே இயங்கி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சித்த மருத்துவமனை 24 மாதங்களை கடந்து இருக்கக்கூடிய சூழலில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. அந்த பணியாளர்களுக்கு மாத ஊதியம் கொடுப்பதற்கு அந்த எய்டட் அப்ரூவல் பெறுவதற்கான கோப்பு அரசின் கவனத்திற்கு வந்திருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். அந்த அனுமதியை விரைந்து கொடுத்து அந்த பணிகளை தொடங்கிட வேண்டுமென கேட்டு அமைகின்றேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பொறுத்தளவில் ஒரு துறையினுடைய நிர்வாகத்தை போல் பழனியில் தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடம் பார்ப்பதற்கு மாவட்ட அமைச்சர்கள் அண்ணன் திரு.ஐ.பி. அவர்களும், திரு.சக்கரபாணி அவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர் திரு. செந்தில்குமார் அவர்களும் நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். சித்த மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தவுடன் அனுமதி வழங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்தது. அதற்குண்டான சட்ட விதிமுறைகளின்படி முன்கூட்டியே ஒரு சித்த மருத்துவமனை இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் அவர்களால் 2023 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக துறையினுடைய கோப்புகள் எதுவாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார். என் கவனத்திற்கு எட்டிய வரை உறுப்பினர் அவர்கள் கூறியது போல் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை. இருந்தால் உடனடியாக இன்றே அதை நிவர்த்தி செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Minister ,Sekarbaba ,Chennai ,Tamil Nadu Assembly ,Hinduism ,and Social Affairs ,Shri. B. K. Sekharbhabu ,Thiruthani Assemblyman ,Mr. ,S. Chandiran ,Alankulam ,Assemblymember ,Shri. ,Paul Manoj Pandian ,Sekarbhabu ,Tamil Nadu Legislature ,
× RELATED மூலப்பத்திரம் இல்லாமல் பத்திர பதிவு...