*பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் கைவிட கோரிக்கை
பவானி : பவானி-மேட்டூர் வழித்தடத்தில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி (டோல் கேட்) அமைக்கும் முடிவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும் என பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.44) வழியாக வரும் வாகனங்கள், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.544) வழியாக செல்லும்போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், வைகுந்தம் என இரு கட்டண சுங்க சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
ஆனால், தொப்பூரிலிருந்து பிரிந்து மேட்டூர், பவானி வழியாக, சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகரில் இணையும் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் இரு சுங்கச்சாவடிகளை தவிர்த்து பயணித்து வந்தன. இதனால், பயணிக்கும் தூரமும், டோல்கேட் இல்லாததால் கட்டணமின்றி சென்று வந்தன.
இந்நிலையில், ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் வரையிலான 85 கி.மீ. தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (என்.ஹெச்.544ஹெச்) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து, ஏற்கெனவே உள்ள தார் சாலை தலா 1.50 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது. மேலும், சாலையின் குறுக்கே இரு இடங்களில் (தொப்பூர் மற்றும் அம்மாபேட்டை) சுங்கச்சாவடி அமைக்கப்படும் எனவும், இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அம்மாபேட்டை அருகே சுங்கச் சாவடிக்கு பூர்வாங்க கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. தலா 3 வழிகள் மூலம் வாகனங்கள் செல்ல கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கு கட்டணம் குறித்து விவரங்கள் இல்லாமல் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது எனவும், கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், ‘‘ஈரோடு – பவானி – மேட்டூர் – தொப்பூர் வழித்தடத்தில் ஏற்கனவே உள்ள மாநில சாலையில், விரிவாக்கம் மட்டும் செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இரு கட்டண சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். எனவே, சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள், விவசாயிகள் கூறுகையில், ‘‘மரங்கள் நிறைந்த பசுமை சாலையாக பவானி – மேட்டூர் சாலை இருந்து வந்தது. தற்போது, சாலை விரிவாக்கம் எனும் பெயரில் 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இருந்த தார்ச்சாலையில், இருபுறமும் சேர்த்து 1.50 மீட்டருக்கு மட்டுமே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரோட்டில் உள்ள அபாயகரமான வளைவுகள் நேராக்கப்படவில்லை.
பல்வேறு பகுதிகளில் சாலை கட்டுமானம் தரமற்ற வகையில் உள்ளது. இந்நிலையில், இருவழிச் சாலையையே தேசிய நெடுஞ்சாலை என்பதும், சுங்கச்சாவடி அமைப்பதும் வாகன உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் செயலாக இருக்கும். தொப்பூர் – மேட்டூர், பவானி – மேட்டூர் வழித்தடங்களில் அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளை அகற்றுவதோடு, கட்டணம் வசூலிக்கும் முடிவை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும்’’ என்றனர்.
The post பவானி-மேட்டூர் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.