×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை : ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் காவனூரில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் கா.காளிராசா தலைமையில் குழுவினர் இப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து கா.காளிராசா கூறியதாவது:

காவனூரில் உள்ள மதுரைவீரன் சாமி கோயில் கல்வெட்டை நேரடி கள ஆய்வில் வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்தை சேர்ந்தது எனத்தெரிந்தது. அவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பட்டிருந்த கல்வெட்டில் எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது. இக்கல்வெட்டில் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டின் இறுதியில் நயினார்கோவில் முத்துக்காத்தப்பதி என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன, முத்துக்காத்தபதி என்பது ராமநாதபுர ஜமீன்தார் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியை குறிப்பிடுகிறது, இவர் ராணி பர்வத நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவர்.

இவரது மகன் பாஸ்கர சேதுபதியே, விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரியவர். இரண்டு கழுமரம் போன்ற தூண்கள் இக்கோயிலில் மதுரை வீரனாக வணங்கப்பட்டாலும், ஒரே வடிவில் இரு தூண்கள் நடப்பட்டு இரண்டின் கீழ் பகுதியில் மதுரைவீரன் சிற்பம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

ஒரு தூணை மட்டும் நட்டு வணங்காமல் இரண்டும் ஒரே வடிவில் நடப்பட்டு வணங்கப்படுவதால் அன்றைய சூழலில் நேரடியாக மருது சகோதரர்களை வணங்க முடியாமல் இவ்வாறான ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஊர் மக்கள் இக்கோயிலை ஊர்க்காவலன் என்று வணங்குகின்றனர். ஊர் பொது நிகழ்வுகளுக்கு இக்கோயிலில் தேங்காய் உடைத்து வழிபடுவது மரபாக தொடர்கிறது.இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mangalam ,Madurai ,Kavanaugh ,Horticulture Department ,Sivaganga Archaeological Group ,Ilangovan Kavanur ,Kallirasa ,R. ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்