×

பழநி நகரில் 50 ஆண்டுக்கு மேலாக வசித்தவர்களுக்கு பட்டா

*கலெக்டர் ஆய்வு

பழநி : பழநி நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.பழநி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் தண்ணீர் தொட்டி கிரிவீதியில் அமைந்துள்ளது. இக்குடிநீர் தொட்டிக்கு பைப் லைன் கொண்டு செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் தாசில்தார் தலைமையில் நகராட்சி மற்றும் கோயில் அதிகாரிகள் இடையே சமரச கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கோயில் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இதை தொடர்ந்து நேற்று பழநியில் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பைப் லைன் அமைப்பது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பழநி நகர மக்களின் குடிநீர் பிரச்னையை சரிசெய்யும் வகையில் பைப் லைன் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து பழநி டவுன், இந்திர நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 12 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்காக அந்த இடங்களை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பழநி அருகே கோதைமங்கலத்தில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் சத்துணவு கூடங்களை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, கிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பழநி நகரில் 50 ஆண்டுக்கு மேலாக வசித்தவர்களுக்கு பட்டா appeared first on Dinakaran.

Tags : Patta ,Palani ,Saravanan ,Palani Municipality ,Kiriveethi ,Dinakaran ,
× RELATED மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்று...