×

மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியானது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ‘மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியானது பற்றி பிரதமர் மோடி ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை?’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மகா கும்பமேளா குறித்த பிரதமர் மோடியின் பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட போது, வெளியில் வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கும்பமேளா, நம்முடைய வரலாறு மற்றும் கலாசாரம் என்று பிரதமர் கூறுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் எங்களுடைய ஒரே புகார்.
மகா கும்பமேளாவுக்கு சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயத்தையும் எதிர்பார்க்கிறார்கள், அது வேலைவாய்ப்பு.

அது குறித்தும் பிரதமர் பேசியிருக்க வேண்டும். இது குறித்தெல்லாம் எங்களை பேச அனுமதிக்கவில்லை. ஜனநாயக கட்டமைப்பின்படி, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் அனுமதி தரப்படவில்லை. ஏனென்றால் இதுதான் புதிய இந்தியா. இவ்வாறு கூறினார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகளும் 2 நிமிடங்களாவது பேச அனுமதித்திருக்க வேண்டும்’’ என்றார்.

The post மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியானது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Maha Kumbh Mela ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,
× RELATED சொல்லிட்டாங்க…