சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தெலங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10சதவீதமாக ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது.
அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூகநீதிப் புரட்சி தான். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
The post பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 42% உயர்வு தெலங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி: ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.