×

தீபாவளி நகைச்சீட்டு நடத்தி பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி : ஐசிஎப் ஊழியர் கைது

பெரம்பூர்: திருவிக நகரில் நகைச்சீட்டு நடத்தி பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த ஐசிஎப் ஊழியரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகுமார் (58), ஐசிஎப் ஊழியர். இவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தீபாவளி நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், 60க்கும் மேற்பட்ட பெண்கள் தீபாவளி சீட்டில் இணைந்து மாதம்தோறும் ரூ.1500 மற்றும் ரூ.1300 வீதம் செலுத்தி வந்துள்ளனர். இவ்வாறு, நகை சீட்டு கட்டிய பெண்களுக்கு இவர் ரூ.10 லட்சம் வரை தங்க நாணயம் தர வேண்டி இருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நகை விலை கடுமையாக உயர்ந்ததால் சாந்தகுமாரால் தீபாவளி சீட்டு கட்டிய பெண்களுக்கு நகை வாங்கி கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து, சாந்தகுமார் சீட்டு பணம் கட்டிய பெண்களிடம் பணத்தை திருப்பித் தருவதாகவும், சிறிது காலஅவகாசம் வேண்டும், என்று கூறியுள்ளார். அதனை ஏற்று சீட்டு கட்டியவர்கள் பொறுமையாக இருந்தனர். இதனிடையே சீட்டு பணத்தை கொடுக்குமாறு பலமுறை கேட்டும் சாந்தகுமார் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், திருவிக நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து சாந்தகுமாரை அழைத்து விசாரித்தனர்.

அதில், தனது மகன் விக்னேஸ்வரன் பெயரில் நகை சீட்டு நடத்தி பெண்களிடம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் சாந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் சாந்தகுமாரின் மகன் விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா, என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தீபாவளி நகைச் சீட்டு நடத்தி பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி நகைச்சீட்டு நடத்தி பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி : ஐசிஎப் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : ICF ,Perambur ,Thiruvik Nagar ,Shanthakumar ,Madhavaram Highway ,Dinakaran ,
× RELATED திருவிக நகர் தொகுதி வார்டு எண் 71ல்...