- சுகுகாபி சுரேஷ்
- மதுராந்தகம் மலைக் கோயில்.
- கோட்டூர்புரம்
- அருண்
- யூ பிளாக், சித்ரா நகர், கோட்டூர்புரம்
- பட்டாபை சுரேஷ்
- நாகவல்லி அம்மன் கோவில்
போரூர்: கோட்டூர்புரம் சித்ரா நகர் யு பிளாக் பகுதியை சேர்ந்தவர் அருண் (25). ரவுடியான இவர், தனது நண்பரான மற்ெறாரு ரவுடி படப்பை சுரேஷ் உடன் கடந்த 16ம் ேததி இரவு மது அருந்திவிட்டு வீட்டின் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்குகளில் வந்த 8 பேர், அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பினர். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் (எ) சுக்கு காபி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அப்போது, குற்றவாளிகள் அனைவரும் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தனர். எனவே, குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்த போது, கொலை சம்பவத்திற்கு முன், கொலையாளிகளில் ஒருவன், கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள வாலிபர் ஒருவருக்கு போன் செய்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், கொலையாளிகள் அனைவரும் மதுராந்தகம் அருகே உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தான். அவன் மூலம் கொலையாளிகளிடம் செல்போனில் பேச வைத்து, அவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொடுப்பதாகவும், அதை வாங்க மாலையில் இருந்து கீழே வர வேண்டும் என்றும் பேச வைத்தனர். பின்னர், தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் அங்கு சென்று, பதுங்கி இருந்து கண்காணித்தனர். அப்போது, சாப்பாடு வாங்க கொலையாளிகளில் ஒருவன் மலையில் இருந்து இறங்கி கீழே வந்த போது தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் சுக்குகாபி சுரேஷ் உட்பட 5 பேர் சிவன் மலையில் உள்ள கோயில் இருப்பதாக தெரிவித்தான். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மலை அடிவாரத்தில் சில போலீசாரை பாதுகாப்புக்கு நிறகவைத்துவிட்டு, உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான தனிப்படையினர் சிவன்மலை மீது ஏற தொடங்கினர்.
லைட் வெளிச்சம் இருந்தால் கொலையாளிகள் தப்பித்து விடுவார்கள் என்பதால், தனிப்படையினர் டார்ச் லைட் இல்லாமல் கையில் ஒரு குச்சியுடன் நிலா வெளிச்சம் உதவியுடன் மலையேற தொடங்கினர். மலையேறும் போது பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளை கடந்து தனிப்படையினர் எந்தவித சத்தமும் இல்லாமல் ‘சினிமா காட்சிகள்’ போல் மலைமீது ஏறினர். மலை மீதுள்ள கோயிலை நெருங்கியதும், தனிப்படையினர் கோயிலை சுற்றி வலைத்தனர். அப்போது ரவுடி சுக்கு காபி சுரேஷ் உட்பட 5 பேர் கோயில் மண்டபத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினர். தனிப்படையினர் அவர்களை நெருங்கிய போது, திடீரென சுக்குகாபி சுரேஷ் ‘நம்பள போலீஸ் சுத்து போட்டுட்டாங்க. தப்பி ஓடுங்கடா… என்று கூச்சலிட்டார். உடனே 5 பேரும், தனிப்படையினர் மீது கற்களை வீசியபடி மலையில் இருந்து இறங்கி ஓடினர். ஆனால் தனிப்படையினர் அவர்களை விடாமல் துரத்தினர். அப்போது மலையில் இருந்து வேகமாக இறங்கிய சுக்குகாபி சுரேஷ் உட்பட 3 பேர் மலையின் கற்களுக்கு இடையே கால்கள் சிக்கிய எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே போலீசார் கால்கள் உடைந்த 3 பேர் உட்பட 5 பேரை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர். பின்னர் ரவுடி சுக்குகாபி சுரேஷ், கோட்டூர்புரத்தை சேர்ந்த கரண் (எ) மனோஜ் (26), வடபழனியை சேர்ந்த ராசுக்குட்டி (எ) செல்வகணபதி (19), ஆதம்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் (20), செங்குன்றம் சோழவரம் பகுதியை சேர்ந்த ஜீவன் (19) ஆகியோரை தனிப்படையினர் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் படி கொலையில் தொடர்புடைய மேலும் 2 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கத்திகள், 2 செல்போன்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான ரவுடி சுக்குகாபி சுரேஷ் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கோட்டூர்புரம் சித்ரா நகரில் யு பிளாக்கில் அருண் வசித்து வந்தார். சுக்குகாபி சுரேஷ் சித்ரா நகர் வி பிளாக்கில் வசித்து வந்தனர். இருவரும் மீதும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சித்ரா நகரில் யார் பெரிய ரவுடி என்பதில் ரவுடி அருணுக்கும், சுக்குகாபி சுரேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடிக்கடி ஒருவரை ஒருவர் மோதி கொண்டனர்.
இதற்கிடையே சித்ரா நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் வி பிளாக் சிதலமடைந்ததால் அதில் வசித்தவர்களை புதிய குடியிருப்பு கட்டும் வரை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் சுக்குகாபி சுரேஷ் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். அடிக்கடி சுக்குகாபி சுரேஷ் சித்ரா நகருக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது ரவுடி அருண், இனி சித்ரா நகரில் நான் தான் பெரிய ரவுடி, இனி உனக்கு இங்கு வேலை இல்லை, என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில், செங்கல்பட்டு சிறையில் ரவுடி அருண் மற்றும் சுக்கு காபி சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுக்குகாபி சுரேஷ், சித்ரா நகரில் உள்ள தனது நண்பர்களிடம் அருண் நடமாட்டம் குறித்து கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த 16ம் தேதி மாலை ரவுடி அருண் தனது நண்பரான ரவுடி படப்பை சுரேஷை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்துள்ளார். இதுகுறித்து சித்ரா நகரில் உள்ள சுக்குகாபி சுரேஷ் நண்பர்களான 2 சிறுவர்கள், ‘அண்ணா நீ இங்க வந்தால் உன்னை போட்டு தள்ள படப்பை சுரேஷை அருண் அழைத்து வந்துள்ளான்.
நீங்கள் இங்க வராதீங்க அண்ணா…. என்று கூறியுள்ளனர். அதை கேட்டு ஆத்திரமடைந்த சுக்குகாபி சுரேஷ் அன்று இரவு தனது நண்பர்களுக்கு போன் செய்து ‘என்னை கொலை செய்ய அருண் ஆட்களை சேர்த்து வைத்துள்ளான். அவனை இனி விட்டால் என்னை போட்டு தள்ளிவிடுவான். எனவே அவன் என்னை போடுவதற்கு முன்பு அவனை நாம் போட்டுவிடுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்களும் நாங்களும் அருணை கொலை செய்ய உதவி செய்கிறோம் என்று கூறி இரவு 8.30 மணிக்கு நெருங்கிய நண்பரான ஆதம்பாக்கத்தில் சண்முகம் வீட்டின் அருகே ரவுடி சுக்குகாபி சுரேஷ் தலைமையில் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். பிறகு தகவல் அளித்த சிறுவர்களுக்கு, மீண்டும் சுக்குகாபி சுரேஷ் போன் செய்து அருண் இப்போ எங்க இருக்கான்… அருண் இருக்கும் இடத்தில் யாராவது இருக்காங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவர்கள். ‘அண்ணா நம்ப ஏரியா அருகே பொது கூட்டம் ஒன்று நடக்கிறது. அந்த கூட்டத்திற்கு வந்தால், சேர் இலவசம் என்று அறிவித்துள்ளனர். இதனால் சித்ரா நகரில் உள்ள அனைவரும் கூட்டத்திற்கு சென்றுவிட்டனர். இப்போது சித்ரா நகரில் யாரும் இல்லை. நீங்கள் வந்தால் அருணை முடித்துவிட்டு போய்விடலாம். அவன் கோயிலில் குடித்துவிட்டு போதையில் கிடக்கிறான் என்று தகவல் அளித்தனர்.
அதன்படி ரவுடி சுக்குகாபி சுரேஷ் தனது நண்பர்களுடன் வந்து ரவுடி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அவசரத்தில் இந்த கொலைகளை செய்தால், வழக்கு செலவுக்கு பணமின்றி, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மதுராந்தகம் அருகே உள்ள சிவன் மலைக்கு சென்றுவிடுவோம். அதன் பிறகு யாரிடமாவது செலவுக்கு பணம் கேட்டு பிறகு நல்ல வக்கீல் மூலம் கோர்ட்டில் சரணடையலாம் என்று முடிவு செய்து சிவன்மலைக்கு சென்றுவிட்டனர். பிறகு எங்களுடன் வந்த ஒருவன் செலவுக்கு பணம் தேவை என்று நண்பர் ஒருவனுக்கு போன் செய்ததால் நாங்கள் பதுங்கி இருந்த இடைத்தை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். கோட்டூர்புரம் சித்ரா நகரில் யார் பெரிய ரவுடி என்ற மோதலில் இந்த கொலைகளை நாங்கள் செய்துவிட்டோம் என்று வாக்குமூலம் அளிதத்தாக போலீசார் தெரிவித்தனர்.
The post கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் மதுராந்தகம் மலை கோயிலில் பதுங்கி இருந்த ரவுடி சுக்குகாபி சுரேஷ் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.