மதுரை, மார்ச் 18: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், சர்வதேச தரத்தில் வெளிநாட்டு ரப்பர் உதவியுடன் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் ரப்பர் மெட்டீரியல் உதவியுடன் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் போனதால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. இதனால் புதிதாக சர்வதேச தரத்தில் ஓடுதளம் அமைக்க விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி அங்கிருந்த சேதமடைந்த ஓடுதளம் முழுவதும் அகற்றப்பட்டது. பின்னர் இந்த ஓடுதளம் இருந்த பகுதியை சுற்றிலும் மழை நீர் வடிகால் வசதிக்கான குழாய்கள் பதிக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் மையப்பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த மண் ஒரு அடி ஆழத்திற்கு தோண்டி அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.. இதற்கிடையில் ஓடுதளத்தில் மண்ணை அகற்றிய இடத்தில் உருவான பள்ளத்தில் ‘வெட்மிக்ஸ்’ எனும் கலவை கொண்டு தளம் அமைக்கப்பட்டது. பின்னர் அதன் மேல் தார்ரோடு போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அதன்மேல் பரப்பில் கறுப்பு நிற ரப்பர் உருக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் பாலை எடுத்து தளம் அமைக்கப்பட்டது. இதற்கு மேல் சிவப்பு நிற ரப்பர் உருக்கப்பட்டு கிடைக்கும் பாலினை ஊற்றி ஓடுதளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுக்கு வந்தால் புதிய சிந்தடிக் ஓடுதளம் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்த சிறப்பு வாய்ந்த சிவப்பு நிற ரப்பரை உருக்கி, மேல் பகுதியில் ஊற்றி ஒரே அளவில் ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ‘‘ஓடுதளத்தின் முக்கிய பணிக்காக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற ரப்பர் மூலப்பொருள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கொண்டு சிந்தடிக் ஓடுதளத்தின் மேல்பகுதியை அமைப்பதன் வாயிலாக, பல ஆண்டுகள் அது நீடித்து உழைக்கும்’’ என்றார்.
The post மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி வேகம் வெளிநாட்டு ரப்பரில் சிறப்பாக உருவாகி வருகிறது appeared first on Dinakaran.