×

தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் செயல்படும் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள் உள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. மக்களவையில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்: நாட்டில் தற்போது உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பிஎம்  பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவற்றின் செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநில வாரியாக எவ்வளவு? குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? தமிழ்நாட்டில் செயல்படும் பிஎம்  மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், இந்தி, மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் சமநிலை உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அளித்த பதில்கள்:

* தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 24 பள்ளிகளில் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது. மீதமுள்ள 21 பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்பான தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிஎம்  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 69 இந்தி ஆசிரியர்கள், 50 சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் ஆசிரியர்கள் 34 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர், நிரந்தர மொழி ஆசிரியர் பணியிடங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பள்ளிகளில் முதன்மையாக இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா கல்விக் குறியீட்டின் 112வது பிரிவின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே உள்ளூர்/ பிராந்திய மொழியில் பாடங்கள் நடத்தப்பட கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்போதுகூட கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் துணை ஆணையர் அனுமதி பெற்ற பிறகு, ஒரு பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர் தான் நியமிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalaya ,Tamil Nadu ,Union government ,Dayanidhi Maran ,New Delhi ,Lok Sabha ,DMK ,Central Chennai Parliamentarian ,Union Education Ministry… ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2152 கோடி கல்வி...