×

கொளுத்தும் வெயில் பாறையாக காட்சியளிக்கும் திற்பரப்பு அருவி


குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்து பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். தற்போது அக்னி வெயில் போன்று கடும் வெயில் கொழுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களை நாடி செல்கின்றனர்.

இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு அவ்வப்போது லேசான சாரல் பெய்தாலும் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலால் நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. மலைகளில் இருந்து வரும் நீரோடைகள், நீரூற்றுகள் வறண்டு விட்டதால் ஆறுகளில் வரும் தண்ணீரும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக ஆர்ப்பரித்து கொட்டி வந்த திற்பரப்பு அருவியில் தற்போது மிகக்குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் விழுகிறது.

பிற பகுதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்து எங்கும் பாறையாக காட்சியளிக்கிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதால் அருவியில் தண்ணீர் வெந்நீர் போன்று விழுகிறது. இதனால் பயணிகள் அருகிலுள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை வரை வெயில் கொளுத்திய நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காற்று வீசியது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது.

The post கொளுத்தும் வெயில் பாறையாக காட்சியளிக்கும் திற்பரப்பு அருவி appeared first on Dinakaran.

Tags : Thirparappu Waterfall ,Kumari district ,Kanyakumari ,Kodaiyar ,Western Ghats ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...