
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில்,
*அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை பரீசிலித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும்.
*அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாணவர்களின் விருப்பம் போல் கையடக்க கணினி அல்லது லேப்டாப் வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்படும்.
*காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை – கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், நாயக்கனூர், இராமநாதபுரம் – தனிச்சியம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சாவூர் – நடுவூர், திருச்சி – சூரியூர், திருநெல்வேலி – நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் ரூ.366 கோடி மதிப்பீட்டில், 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு 17,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். சுற்றுலா கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
*உதகை ரேஸ் கோர்ஸ் ரூ.70 கோடி செலவில் சுற்றுச் சூழல் பூங்காவாக மாற்றம் செய்யப்படும்.அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
*குமரி, நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி இறங்குதளம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
*மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.381 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். உயர் மதிப்புடைய ஆடைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*கைத்தறி துறைக்கு ரூ.1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.673 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வீட்டு வசதி துறைக்கு ரூ.7718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும.
*சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோயில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர்.
*1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.250 கோடியில் ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் அமைக்கப்படும். சென்னை திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
*சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடம் வசதிகளுடன் கட்டப்படும். பொதுப்பணித்துறைக்கு ரூ.2,457 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*ஆவின் பால் நிறுவனங்களிலுள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்ணெய், பால் பவுடர் சிப்பமிடும் நவீன இயந்திரம் அமைக்கப்படும்
*17 புராதன கட்டடங்கள் ரூ.150 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2100 கோடி செலவில் உயர்மட்ட நெடுஞ்சாலை அமைக்கப்படும். கோவை தெற்கு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 14 புறவழிச் சாலைகள் ரூ.1,400 கோடியில் அமைக்கப்படும்.
*விபத்து நடக்கும் இடங்கள், சந்திப்புகள் ரூ.200 கோடியில் சீரமைத்து மேம்படுத்தப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலமைச்சரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராம அறிவுசார் மையங்கள் திட்டத்தை செயல்படுத்திட ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி என 10 ஊராட்சிகளுக்கு நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,513 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*ரூ.40 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபுசார் காட்சி அரங்கம் அமைக்கப்படும். நடப்பாண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும். ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
*நடப்பு நிதியாண்டில் அரசின் சொந்த வரி வருவாய் ரூ. 192 லட்சம் கோடியாகும். வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் 14.6% உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.2 % லிருந்து 1.17 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
*ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருகிறது. தேசிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9%ஆக உள்ள நிலையில் 4% மட்டுமே ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு போதிய அளவில் ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை. ஃபெஞ்சல் புயலின்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.276 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்தது.
இதையடுத்து 2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
The post அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் : அமைச்சர் தங்கம் தென்னரசு!! appeared first on Dinakaran.
