- கோசாஸ்தலே நதி
- திருவள்ளூர்
- திருவள்ளூர் புண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம்
- சென்னை
- கோசாஸ்தலே நதி
- தின மலர்
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் ரூ.10 கோடியில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன்படி கடைமடைப் பகுதியான புதுநாப்பாளையம், விச்சூர், இடையஞ்சாவடி உள்ளிட்ட பகுதியின் வழியாக கடலில் கலக்கும்.
அதிகபட்சமாக கடந்த 2015ம் ஆண்டு 90,000 கன அடிக்கும் அதிகமான உபரிநீர் திறக்கப்பட்டதால் திருவள்ளூர் தெற்கு, வட சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் வரும் வெள்ளநீர், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் அரிப்பு ஏற்படுத்தி அருகே வசிக்கும் கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட கம்மவர்பாளையம், மடூர் அருகிலிருந்து வெள்ளிவயல் சாவடி வரை 9 கிமீ தூரத்திற்கு ரூ.9.10 கோடி செலவில் பருவமழைத் தடுப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதங்களிலேயே கரையை பலப்படுத்த போடப்பட்ட கான்கிரீட் தடுப்பு சுவர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்து செல்லப்பட்டது. கரையை பலப்படுத்தும் வகையில் போடப்பட்ட பணிகள் விதிகளுக்குட்பட்டு கட்டப்படாமல், தரமற்ற சிப்ஷம் ப்ளாக்குகளை கொண்டும், ஆற்றின் உட்பகுதியிலேயே மண் எடுத்தும் கரையை பலப்படுதியதால் வலுவிழந்து, ஆற்றில் வந்த வெள்ளத்தில் கான்கிரீட் சுவர் சேதமடைந்தது.
மேலும் பல இடங்களில் போடப்பட்ட சிப்சம் ப்ளாக்குகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 9 கிமீ தூரம் வரை கான்கிரீட் தடுப்பு சுவர் போட்டு கரையை திடப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.9.10 கோடி நிதியில் சுமார் 800 மீட்டர் தூரம் மட்டுமே வேலை நடந்ததற்கான அடையாளம் மிஞ்சியுள்ளது. மற்றவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தரமான பணி நடக்கவில்லை. மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
The post கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்த போடப்பட்ட ரூ.10 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
