×

திருக்கண்டலம் ஆனந்தவல்லி அம்பிகை கோயில் மாசி தெப்பத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பெரியபாளையம்: திருக்கண்டலம் ஊராட்சி, ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் சுந்தர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. மறுநாள் மாலை சுக்கிரவல்லி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மடவிளாகம் கிராமத்தில் இருந்து தாய்வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழம், புடவை உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், அம்பிகை சமேதராக திருக்கள்ளீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோயிலின் எதிரில் உள்ள திருக்குளத்தில் வண்ணமலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி 9 முறை உலா வரும் தெப்பத் திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மதன் சத்யராஜ் ஏற்பாட்டில், கோயில் வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய பொருளாளர் குப்பன், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஆனந்தன், சரண்ராஜ், முத்துராஜ், தினேஷ், அன்பு உள்பட ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடவிளாகம், திருக்கண்டலம் கிராம பொதுமக்கள், பக்தர்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

The post திருக்கண்டலம் ஆனந்தவல்லி அம்பிகை கோயில் மாசி தெப்பத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirukandalam Anandavalli Ambika Temple Masi Theppam Festival ,Periypalayam ,Masi Theppam Festival ,Anandavalli Ambika Temple ,Thirukandalam Panchayat ,The Masi Theppam Festival ,Yellapuram Union ,
× RELATED பெரியபாளையம் அருகே தனியார்...