திருப்போரூர்: சென்னை அருகே தாழம்பூர், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(47). இவர், வீட்டிலேயே மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டின் முன் பக்கத்தில் இருந்த மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பால் கறந்து விட்டு மின் விளக்குகளை அணைத்துள்ளார். அப்போது, மின் கசிவு காரணமாக சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியதில் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இவரது, அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் ஜெயலட்சுமி ஒடிவந்து பார்த்த போது கை கால்களை உதைத்த நிலையில் சுரேஷ் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி அலறிக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து சுரேஷை மீட்டு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி appeared first on Dinakaran.