×

மாநகர போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன பேருந்துகளில் மாதாந்திர பாஸ் திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 630 வழித்தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் தினமும் 32 லட்சம் பேர் வரை பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையை பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக மாநகர போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. சாதாரண பேருந்து, சொகுசு பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏசி பேருந்துகள் என பல வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாதாரண பேருந்தில் நாள்தோறும் பயணிப்பதற்கான பயண சலுகை அட்டை குறைந்த விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், போக வர இருமுறை மட்டுமே பயணிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்படுகிறது.

அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையும் மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. மாதம்தோறும் ரூ.1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் இந்த பயணச் சலுகை அட்டை மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிக்க முடியும்.

ரூ.1,000 அட்டை மூலம் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ள முடியும். தினமும் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த பஸ் பாஸ் முறை வரப் பிரசாதமாக இருந்து வருகிறது. தினமும் வேலைக்குச் செல்பவர்கள் சமீப காலமாக ஏசி பேருந்துகளில், செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாஸ் பயன்படுத்தும் மக்கள், ஏ.சி பேருந்துகளில் அதனை பயன்படுத்த முடியாது. பிற மாநகர பேருந்துகளுக்கு பஸ் பாஸ் வழங்குவதைப் போன்று ஏசி பேருந்துகளுக்கும் சிறப்பு பாஸ் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்‌.

இந்த நிலையில், குளிர்சாதனப் பேருந்துகளையும் உள்ளடக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி குளிர்சாதன பேருந்துகளிலும் பயணம் செய்ய ஏதுவாக பயணச் சலுகை அட்டைக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகரத்தில் இயங்கும் ஏசி பேருந்து உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம். இந்த திட்டம் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post மாநகர போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன பேருந்துகளில் மாதாந்திர பாஸ் திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை – மும்பை ஐபிஎல் போட்டி; மாநகர...