தேவாரம், மார்ச் 14: அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள நிழல்தரும் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, தேவாரம், கோம்பை உள்ளிட்ட 22 பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய கட்டிடப்பணிகள, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை விரிவாக்கம், தெரு விரிவாக்கம், புதிய சாக்கடைகள் கட்டுதல், போக்குவரத்து பாலம், தார்சாலை, சிமென்ட், பேவர் பிளாக் சாலை என விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் ஏற்கனவே உள்ள நிழல்தரும் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் அனைத்து பேரூராட்சிகளிலும் பரவலாக பழமையான மரங்கள் எண்ணிக்கை குறைகிறது. கடந்த இருபது ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மரங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் கூட இல்லை.
எனவே அனைத்து பேரூராட்சிகளிலும், இருக்கும் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது தொடர்ந்து வருகிறது. இதேபோல் வளர்ச்சி பணிகள், புதிய பிளாட்கள், என செய்யும்போது பொதுமக்கள் மரங்களை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் முடிவதில்லை. எனவே அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள மரங்களை வெட்டுவதற்கு, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தடை விதிக்க வேண்டும். இதேபோல் தேவை என்றால் உரிய அனுமதி பெற்றால் மட்டும் மரத்தை வெட்ட அனுமதி என்ற தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இயற்கை மர காப்பாளர் ஷமிமுல் கூறும்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். தோட்டங்கள் அழிக்கப்பட்டு, புதிய வீடு கட்டும் மனைகளாக மாற்றப்படும்போது, மரங்களை இஷ்டத்திற்கு வெட்ட அனுமதி தரக்கூடாது. மரங்களை வெட்டுவதற்கு உரிய தடைவிதிக்க வேண்டும் என்றார்.
The post வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு தடை : இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
