×

தேவையான மருந்து, மாத்திரை இருப்பு வைத்து முதல்வர் மருந்தக பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த மாதம் 24ம் தேதி திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பேசியதாவது: ‘முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தின் படி, முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் கடந்த மாதம் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர். முதல்வர் மருந்தகங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகளான வாடிக்கையாளர்களை மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும்.

முதல்வர் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், முதல்வர் மருந்தகம் என்ற சிறப்பான திட்டம், உயிர் காக்கும் உன்னத திட்டமாகும். எனவே தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்து, பயனாளிகளுக்கு இருப்பு இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். மருந்து கொள்முதல் பணிகள் தொய்வில்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மடிப்பேடுகள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மடிப்பேடுகளில் முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்து வகைகள், தள்ளுபடி போன்றவை தெளிவாக இருக்கும் வண்ணம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post தேவையான மருந்து, மாத்திரை இருப்பு வைத்து முதல்வர் மருந்தக பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Registrar ,of ,Cooperative Societies' ,Office ,Cooperatives Minister ,K.R. Periyakaruppan.… ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்