- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில திட்டமிடல் ஆணையம்
- துணை
- ஜெயரஞ்சன்
- சென்னை
- துணைத்தலைவர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தலைவர் ஜெயரஞ்சன்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 8 சதவீதமாக இருக்கும். தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும் என்று மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’யை வெளியிட்டார். பின்னர் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: கார், தோல், காலணி, ஜவுளித்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயி செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில்தான் பயிர் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் கடல்மட்டம் உயர்ந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது.
இதை தடுக்க முகத்துவாரம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் போன்ற பெரிய திட்டங்களுக்கு கடனுதவி பெற்றே செயல்படுத்த முடியும். ஒன்றிய அரசு முறையாக நிதியை வழங்கினால் கடனுதவி பெற வேண்டிய தேவை குறையும். கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை, மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கலாம். உற்பத்தி மதிப்புக்கு கீழ்தான் கடன் வாங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படியே கடன் வாங்க முடியும், அதை மீறி கடன் வாங்க முடியாது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக நீடிக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மக்கள்தொகையில் 31.8% உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. 22.8% மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம் GSDP-யில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள்தொகை பங்கைக் கொண்டுள்ளது தெற்கு மண்டலம் GSDPக்கு 18.8% பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம் 25.5% மக்கள்தொகையுடன் 15.1% என்ற மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும். தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ.1.69 லட்சத்தை காட்டிலும் 1.64 மடங்கு அதிகமாகும். தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது. தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 4ம் இடம் வகிக்கிறது. மாநில பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக நிலையாக இருக்கிறது. இந்த ஆண்டும் 8 சதவிகிதம் அல்லது அதற்கு மேலாக இருக்கும். வேறு சில மாநிலங்களும் பொருளாதார அறிக்கையை தயார் செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இதுதான் முதன்முறை. இவ்வாறு அவர் கூறினார்.
* அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் தமிழ்நாடு…
இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்றாக திகழும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலவச கல்வி, விலையில்லா பாடநூல்கள், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் ஈடுபாட்டுடன் தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 58,722 பள்ளிகளில் 1.29 கோடி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தொடக்க பள்ளிகளில் மாணவர் பதிவு 98.4 சதவீதமும், உயர்நிலை பள்ளிகளில் 97.5 சதவீதமும், மேல்நிலைப்பள்ளிகளில் 82.9 சதவீதமும் உள்ள நிலையில், தேசிய அளவில் இந்த விகிதம் முறையே 91.7, 77.4, 56.2 சதவீதமாக உள்ளது என்று ஜெயரஞ்சன் கூறினார்.
The post பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும்: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல் appeared first on Dinakaran.
