×

வடமாநிலங்களில் ஒரு மொழி தான் உள்ளது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப.சிதம்பரம் பேட்டி

திருமயம்: வடமாநிலங்களில் ஒரு மொழி தான் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை செயல்படவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது. 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். புதிய கல்வி கொள்கையை 2020ல் அறிவித்தனர். 5 ஆண்டு கழித்து மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். கடந்த 4 ஆண்டுகளாக சொல்லாமல் தற்போது மும்மொழி திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மாட்டோம் என்று கூறுவது அரசியல் நோக்கத்தில் தான்.

வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். மக்களை சந்தித்துள்ளேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். 2வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்வி கொள்கை சொல்கிறது. ஆனால், வடமாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை செயல்படவில்லை. தமிழ்நாட்டில் 52 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளது. அதை நடத்துவது ஒன்றிய அரசு. 52 பள்ளிகளிலும் தமிழையே கற்றுக்கொடுக்கவில்லை. இவர்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாடு அரசை பார்த்து நீங்கள் மும்மொழி திட்டத்தை நிறைவேற்றவில்லை. அதனால் நிதி வழங்கவில்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த பிரச்னையில் பாஜவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் நிற்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அரசியல் கட்சிகள் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வடமாநிலங்களில் ஒரு மொழி தான் உள்ளது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : northern ,India ,P. Chidambaram ,Thirumayam ,Former ,Union Minister ,Thirumayam, Pudukkottai district ,Union Education Minister ,Dharmendra… ,
× RELATED செய்தித் துறையின் 2025-26 ஆண்டிற்கான புதிய...