தஞ்சை: சூரியனார் கோயில் ஆதீனமாக இருந்த மகாலிங்க சுவாமிகள், ஆதீனத்தில் இருந்த நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத சிலைகள் மாயமாகி உள்ளதாகவும், அவற்றை கண்டுபிடித்து மீட்கும்படியும் தஞ்சாவூர் எஸ்பியிடம் நேற்று பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோயில் ஆதீனத்தின் 28வது குருமகா சந்நிதானம் பதவியில் மகாலிங்க சுவாமிகள் என்பவர் இருந்து வந்தார். இவர், கடந்தாண்டு நவம்பர் மாதம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ(47) என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்க கூடாது என்ற மரபு இருப்பதால் மகாலிங்கம் சுவாமிகள் ஆதீன குருமகா சன்னிதானம் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
ஆனால் தான் தொடர்ந்து பதவியில் இருப்பேன் என மகாலிங்க சுவாமிகள் கூறிவந்தார். மகாலிங்க சுவாமிகள் ஆதீன பொறுப்பில் இருப்பதற்கு கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தால் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். அப்போது ஆதீனத்தில் இருக்கும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத சிலைகளை கொள்ளையடிப்பதற்காக தான் தன்னை ஆதீன பொறுப்பில் இருந்து நீக்க சிலர் முயற்சிப்பதாக மகாலிங்க சுவாமிகள் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆதீன பொக்கிஷங்களை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொள்வதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மகாலிங்க சுவாமிகள் 2024 நவம்பர் 13ம் தேதி ஆதீனத்தை விட்டு வௌியேறினார். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் வந்த மகாலிங்க சுவாமிகள், எஸ்பி அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆதீனத்தில் இருக்கும் 500 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த மரகதங்கள், படிகங்கள் ஆகியவற்றை நான் இல்லாத நேரத்தில் அபகரித்து கொள்வதற்காவே தன்னை ஆதீனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வௌியேற்றியுள்ளனர். ஆகையால் விசாரணை நடத்தி தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். மேலும் என்னுடைய உயிருக்கும், சூரியனார்கோயில் ஆதீன சொத்திற்கும் சமூக விரோதிகளால் தொடர்ந்து ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post சூரியனார் கோயிலில் ரூ.100 கோடி மரகத சிலைகள் கொள்ளை? எஸ்பியிடம் மாஜி ஆதீனம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.
