வாரணாசி: இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க உத்தரப்பிரதேசத்தில் மசூதிகள் தார்பாயால் மூடப்பட்டுள்ளன. மத வழிபாட்டு தலங்களில் பெரிய ஒலிபெருக்கி வைத்தால் நிரந்தர நடவடிக்கை பாயும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலி வடமாநிலங்களில் பிரமாண்ட ஊர்வலங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஹோலி பண்டிகையும், இஸ்லாமியர்களின் புனித நாளான வெள்ளிக்கிழமையும் இணைந்து வருகின்றன.
தற்போது ரமலான் மாதம் என்பதால் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை முக்கியமானதாகும். எனவே, ஹோலி ஊர்வலம் செல்லும் வழிகளில் உள்ள மசூதிகளில் அசம்பாவிதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி, பிற்பகல் 2 மணி வரை ஹோலி பண்டிகை கொண்டாடவும் அதன் பிறகு இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல, பதற்றம் நிறைந்த சம்பல் மாவட்டத்தில் பழமையான ஜூம்மா மசூதி உட்பட 10 மசூதிகள் தார்பாய், பிளாஸ்டிக் ஷீட்கள் மூலம் மூடப்பட்டுள்ளன.
ஆற்றங்கரை, நிதி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், மாடு கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஹோலியையொட்டி மத வழிபாட்டு தலங்களில் பெரிய அளவிலான ஒலிபெருக்கிகள் வைத்தால் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹோலி ஊர்வலத்திற்காக மசூதிகளை தார்பாய் வைத்து மூடும் உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post உபியில் அசம்பாவிதத்தை தவிர்க்க ஹோலி பண்டிகையையொட்டி தார்பாயால் மூடப்பட்ட மசூதிகள்: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை appeared first on Dinakaran.