×

கார், தோல், ஜவுளித்துறையில் தமிழ்நாடு முதலிடம்; மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கலாம்: ஜெயரஞ்சன் பேட்டி!!

சென்னை: உற்பத்தி மதிப்புக்கு கீழ்தான் கடன் வாங்கப்படுகிறது என்று மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

கார், தோல், ஜவுளித்துறையில் தமிழ்நாடு முதலிடம்: ஜெயரஞ்சன்
கார், தோல், காலணி, ஜவுளித்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயி செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில்தான் பயிர் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது.

நிலத்தடி நீர் தன்மை சீரடைந்துள்ளது: ஜெயரஞ்சன்
காலநிலை மாற்றத்தால் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் கடல்மட்டம் உயர்ந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கையாக முகத்துவாரம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்புகள் அமைத்த சில மாதங்களிலேயே நிலத்தடி நீரின் தன்மை சீரடைந்துள்ளது.

மெட்ரோ ரயில் போன்ற பெரிய திட்டங்களுக்கு கடனுதவி தேவை:
மெட்ரோ ரயில் போன்ற பெரிய திட்டங்களுக்கு கடனுதவி பெற்றே செயல்படுத்த முடியும். ஒன்றிய அரசு முறையாக நிதியை வழங்கினால் கடனுதவி பெற வேண்டிய தேவை குறையும். கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை, மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கலாம்.

மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கலாம்: ஜெயரஞ்சன்
உற்பத்தி மதிப்புக்கு கீழ்தான் கடன் வாங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படியே கடன் வாங்க முடியும், அதை மீறி கடன் வாங்க முடியாது.

மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் வினாத்தாள்: ஜெயரஞ்சன்
மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் வினாத்தாள் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். ஏ.ஐ. தொழில்நுட்பம் வரும் போது சேவைத்துறை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை கணிக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக நீடிக்கும்:
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக நீடிக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மக்கள்தொகையில் 31.8% உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. 22.8% மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம்| GSDP-யில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள்தொகை பங்கைக் கொண்டுள்ளது தெற்கு மண்டலம் GSDP க்கு 18.8% பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம் 25.5% மக்கள்தொகையுடன் 15.1% என்ற மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சம்
தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 2022-23-ல் ரூ.2.78 லட்சமாக உள்ளதாக ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ.1.69 லட்சத்தைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

The post கார், தோல், ஜவுளித்துறையில் தமிழ்நாடு முதலிடம்; மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கலாம்: ஜெயரஞ்சன் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jayaranjan ,Chennai ,State Planning Committee ,Vice Chairman ,Dinakaran ,
× RELATED 3 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது: வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு