×

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு: திருவனந்தபுரத்தில் உள்ளூர் விடுமுறை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 9வது நாளான இன்று உலகப் பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இன்று காலை 10.15 மணியளவில் கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த அடுப்பில் மேல்சாந்தி முரளீதரன் நம்பூதிரி தீ மூட்டினார்.

அதன் பிறகு கோயிலை சுற்றியும் சில கிலோ மீட்டர் சுற்றளவில் தயாராக காத்திருந்த லட்சக்கணக்கான பெண்கள் அடுப்புகளில் தீ பற்ற வைத்தனர். தொடர்ந்து மதியம் 1.15 மணியளவில் பொங்கல் பானைகளில் புனித நீர் தெளித்து நைவேத்தியம் செய்து வழிபட்டனர். முன்னதாக பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பிருந்தே கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பெண்கள் திருவனந்தபுரத்தில் குவியத் தொடங்கினர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் பொங்கலிடுவதற்காக தங்களது இடங்களை கயிற்றால் கட்டி வைத்து முன்பதிவு செய்து கொண்டனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் நகர் முழுவதும் பாதுகாப்புக்காக 4500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம்-நாகர்கோவில்- எர்ணாகுளம் இடையே ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கம் செல்லும் ரயில்கள் 1ம் நடைமேடையில் இருந்தும், கொல்லம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 2, 3, 4, 5 நடைமேடையில் இருந்தும் புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், கொல்லம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு: திருவனந்தபுரத்தில் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Arugal Bhagwati Amman Temple Festival ,Millions of Women Pongalittu Worship ,Thiruvananthapuram ,Arukal Bhagwati Amman Temple ,Arugal Bhagwati Amman Temple Pongal Festival ,Aatrugal Bhagwati Amman Temple Festival ,Millions of Women Worship Pongalittu: Local ,
× RELATED வேறு சாதியை சேர்ந்த காதலன் பெண் கேட்டு...