ஊட்டி: நேற்று முன்தினம் பெய்த மழையால், கோலனி மட்டம் – முட்டிநாடு சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். காட்டேரி டேம் முதல் முட்டி நாடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சாலை உள்ளது. இந்த சாலை அதிகரட்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் உள்ளதால், இந்த விவசாய நிலங்களில் இருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் சேற்றை அடித்துக் கொண்டு வந்து சாலையில் கொட்டி விடுகிறது. மேலும் இச்சாலை பழுதடைந்து காணப்படுகின்றன. பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் கன மழை பெய்தது.
இதனால் காட்டேரி டேம் முதல் முட்டி நாடு வரை உள்ள சாலையில், கோலனி மட்டம் முதல் முட்டி நாடு வரை உள்ள சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இச்சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இச்சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இச்சாலை ஓரங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post அதிகரட்டி பேரூராட்சி பகுதியில் மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.