போர்ட் லூயிஸ்: இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காக பிரதமர் மோடிக்கு மொரிசியசின் மிக உயரிய விருதினை அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுல் வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக மொரிசியஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரதமர் மோடி, மொரிசியஸ் பிரதமர் ராம்கூலம் தலைமையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு தேசிய கரன்சிகளை பயன்படுத்துதல், கடல்சார் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல், பணமோசடியை எதிர்த்து போராடுவதில் கூட்டு ஒத்துழைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்த ஊடக அறிக்கையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2015ல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான சாகர் தொலைநோக்கு திட்டத்தை இந்தியா தொடங்கியது.
தற்போது இதை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மகாசாகர் புதிய தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப பகிர்வு, சலுகை கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும். மொரிசியசில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட இந்தியா உதவி செய்யும். அது எங்களின் பரிசாக இருக்கும். மேலும் மொரிசியசின் கடலோர காவல்படையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும். 100 கிமீ நீள நீர் குழாய்த்திட்டத்தை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, மொரிசியஸ் நாட்டின் 57வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். அதில், இந்தியா-மொரிசியஸ் நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக பிரதமர் மோடிக்கு மொரிசியசின் ‘கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இண்டியன் ஓசன்’ விருதினை அந்நாட்டு அதிபர் தரம் கோகுல் வழங்கி கவுரவித்தார். இந்த விருதை பெற்ற பிரதமர் மோடி, ‘‘மொரியசின் உயரிய தேசிய விருதை எனக்கு வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
இது எனக்கு மட்டும் கிடைத்த கவுரவம் அல்ல. 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்துள்ள கவுரவம். இந்தியா, மொரியசிஸ் இடையேயான நூற்றாண்டுகள் கடந்த பழமையான வரலாற்று இணைப்புக்கு கிடைத்த மரியாதை இது. இந்த விருதை நமது இருதரப்பு நட்பிற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் அர்ப்பணிக்கிறேன்’’ என்றார். இந்த விருதை பெறும் முதல் இந்திய தலைவர் பிரதமர் மோடி ஆவார். மேலும், அவர் பெறும் 21வது சர்வதேச விருது இது. 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லி புறப்பட்டார்.
* கங்கை தலாவில் பிரதமர் மோடி பூஜை
மொரிசியசின் சவண்ணே மாவட்டத்தில் உள்ள கங்கை தலாவ் புனித ஏரியில் பிரதமர் மோடி நேற்று சென்று வழிபட்டார். இங்குள்ள கோயிலில் 108 அடி உயர துர்கை, சிவன் சிலைகள் உள்ளன. கங்கை தலாவில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். அப்போது மகா கும்பமேளா சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித கங்கை நீரை, கங்கை தலாவ் ஏரியில் ஊற்றி அவர் சிவனை வழிபட்டு பூஜை செய்தார்.
* தேசிய தின விழாவில் இந்திய போர்க்கப்பல்
மொரிசியஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய கடற்படை குழுவினரும் பங்கேற்றனர். கடற்படை வீரர்கள் மற்றும் பேண்ட் இசைக்குழுவினர் அணிவகுப்பில் பங்கேற்ற நிலையில், இந்தியாவின் ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பலில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் பறந்து வான் சாகசத்தில் ஈடுபட்டன.
The post இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து பிரதமர் மோடிக்கு மொரிசியசின் உயரிய விருது: தேசிய தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார் appeared first on Dinakaran.