திருமலை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யா ரூ.100 கோடி சொத்துக்காக கொல்லப்பட்டதாக, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் நடிகர் மோகன்பாபு மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 1990களில் நடிகை சவுந்தர்யாவைப் பற்றி அறியாத திரைப்பட ரசிகர்களே இல்லை என்று கூறலாம். கன்னடப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சவுந்தர்யாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் உச்சத்தை அடைந்தார்.
இந்நிலையில் அடுத்த தலைமுறை கதாநாயகிகள் வந்த பிறகு, சவுந்தர்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் சவுந்தர்யா அரசியலில் நுழைய நினைத்தார். இதற்காக அவர் பாஜவில் சேர்ந்தார். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பாஜ சார்பில் பிரச்சாரம் செய்ய பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சவுந்தர்யா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சவுந்தர்யாவுடன் சேர்ந்து, அவரது சகோதரரும் உயிரிழந்தார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மரணத்திற்கு நடிகர் மோகன்பாபு காரணம் என்று குற்றம் சாட்டி, கரீம்நகர் கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் கடந்த 10ம் தேதி, தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிபாபு என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த புகார் மனு தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகார் மனுவில், ‘நடிகை சவுந்தர்யா திரைப்பட துறையில் உச்சத்தில் இருந்தபோது ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் 6 ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார். தற்போதைய சந்தை மதிப்பில் அது ரூ.100 கோடிக்கு மேல் ஆகும். அந்த விருந்தினர் மாளிகையை தனக்கு விற்றுவிடுமாறு நடிகர் மோகன் பாபு கேட்டார். ஆனால் சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்பாபு, நன்கு திட்டமிட்டு சவுந்தர்யாவையும் அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்துள்ளார். சவுந்தர்யா இறந்த பிறகு அந்த விருந்தினர் மாளிகையை மோகன்பாபு குறைந்த விலைக்கு வாங்கினார்.
அதில் தான் தற்போது மோகன்பாபு இருக்கிறார். எனவே தற்போது மஞ்சு டவுனில் உள்ள அந்த விருந்தினர் மாளிகையை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும். மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜூக்கு நீதி கிடைக்க வேண்டும். மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுத்து விருந்தினர் மாளிகையை பறிமுதல் செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது, இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து மோகன்பாபு தரப்பில் கொடுக்கப்படும் விளக்கத்தை பொறுத்து இதில் மேற்கொண்டு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஆதாரமற்ற புகார்: கணவர் விளக்கம்
இதுகுறித்து நடிகை சவுந்தர்யாவின் கணவர் ரகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் மோகன் பாபுவின் சொத்துக்கள் தொடர்பாகவும், என் மனைவி சவுந்தர்யா மரணம் குறித்தும் தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு, எனது மனைவி சவுந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்தவரை, நாங்கள் அவருடன் எந்த நில பரிவர்த்தனைகளையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபுவை அறிவேன். மேலும் வலுவான மற்றும் நல்ல நட்பைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். எங்கள் குடும்பத்தினர் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஆழமான பிணைப்பை பேணி வருகின்றனர். நான் மோகன் பாபுவை மதிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
The post ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் ரூ.100 கோடி சொத்துக்காக நடிகை சவுந்தர்யா கொலை: 20 ஆண்டுக்கு பின் நடிகர் மோகன்பாபு மீது பரபரப்பு புகார் appeared first on Dinakaran.