×

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தி வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. ரயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக்டேர் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் முடிவுற்று (91%) நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை (100%), மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல ரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரயில் பாதை கட்டம்-1 (100%), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%). கொருக்குப்பேட்டை-எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%), மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல ரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%), மன்னார்குடி – நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை -கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் அகல ரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு 97% முதல் 100% வரை நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ரயில்வே துறையால் எடுக்க வேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இனங்கள்: திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011ம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் முடங்கியுள்ளன. அத்திப்பட்டு – புத்தூர் இடையிலான ரயில்வே தடத்திற்கு இதுவரை ரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை சமர்ப்பிக்கப்படவில்லை. தூத்துக்குடி-மதுரை (வழி அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 702.30 ஹெக்டேர் நிலங்களுக்கு நிர்வாக அனுமதி கடந்த 2023ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மொரப்பூர் தர்மபுரி புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 78.55 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் 8.25 ஹெக்டேர் நில எடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம் & ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி – பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ. ரயில் பாதை திட்டம் மற்றும் தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை இடையிலான 51 கி.மீ ரயில் பாதை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் தற்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசின் நிர்வாக அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்தால் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயில்பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரையில், மேற்படி திட்டங்களை செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே. இரயில்வே துறையின் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நிலஎடுப்பு செய்வதில் தமிழக அரசின் வருவாய் துறையால் தாமதம் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தி வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Chennai ,Union government ,
× RELATED அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி...