×

கோவை அருகே இருகூர்-பீளமேடு இடையே தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப் வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி: மற்றொரு ரயில் லோகோ பைலட் பார்த்ததால் தப்பியது

கோவை: கோவையில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப் வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. மற்றொரு டிராக்கில் சென்ற ரயிலின் லோகோ பைலட் பார்த்து தகவல் கூறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே இருகூர்-பீளமேடு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு சேலம் வழியே செல்லும் திருப்பதி-கோவை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது. அந்த ரயிலின் லோகோ பைலட் கோவை-சேலம் மார்க்க ரயில் பாதையில் தண்டவாளத்தில் பெரிய அளவிலான சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கோவை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கும், சேலம் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து கோவை ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் கிரீஷ் தலைமையிலான போலீசாரும், கோவை ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பாபு தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சிங்காநல்லூர் ரயில்வே கேட் கீப்பர் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் இருந்து அந்த சிமென்ட் சிலாப்பை அகற்றினர்.

இந்த ரயில் பாதை வழியே நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து சேலம் வழியே செல்லும் மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸ் ஆகியவை அடுத்தடுத்து வர இருந்தன. தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்பை வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம நபர் சதி திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

எதிரே வந்த ரயிலின் லோகோ பைலட் பார்த்து உரிய நேரத்தில் தகவல் கூறியதால் சிலாப் அகற்றப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ரயிலை கவிழ்க்க நடந்த இந்த சதி திட்டம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அடிக்கடி அந்த பகுதியில் நடந்து சென்றிருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேமராவில் பதிவாகி இருந்த நபர் யார்? என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் சதிவேலையில் ஈடுபட்டவர்கள் பிடிபடுவார்கள் என்று ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

The post கோவை அருகே இருகூர்-பீளமேடு இடையே தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப் வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி: மற்றொரு ரயில் லோகோ பைலட் பார்த்ததால் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dukur-Pilamed ,Koh ,Goa ,Goa Singanallur Railway Station ,Rugour-Pilamed ,Dinakaran ,
× RELATED சூறைக்காற்று மற்றும் புயல்...