×

சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்களுக்கான தேர்வு 22,23ம் தேதிகளில் நடக்கிறது: கலை பண்பாட்டு துறை அறிவிப்பு

சென்னை: சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவிற்கான தமிழகம் முழுவதும் கலைக்குழுக்கள் தேர்வு இம்மாதம் 22,23ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை, தஞ்சை, வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பறை, பம்பை கைச்சிலம்பு, இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம்,

கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 சனிக்கிழமை அன்றும் தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23 ஞாயிறு அன்றும் பதிவு செய்யப்படும்.

கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in ) வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் மார்ச் 20ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது இணையத்தளத்தில் அனைத்து மாவட்டத்திற்கான பொறுப்பாளர் எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்திற்கான பொறுப்பாளரைத்தொடர்புக் கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்
கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது.

இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம்,போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவர். எனவே, கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது

The post சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்களுக்கான தேர்வு 22,23ம் தேதிகளில் நடக்கிறது: கலை பண்பாட்டு துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sangamam-Namma Uru Festival ,Department of Arts and Culture ,Chennai ,Tamil Nadu ,State Department of Arts and Culture ,Director of ,Culture ,Kavita Ramu ,Pongal ,Samangam-Namma Uru Festival Choices ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின்...