சென்னை: காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி, நிலைத்தடுமாற செய்து கழுத்து, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கேடிஎஸ் மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் ராஜா (எ) வசூல்ராஜா (38). ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான இவர், மீது காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 4 கொலை வழக்குகள் உள்பட சுமார் 28க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட வசூல்ராஜா சிறையில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் திருக்காலிமேடு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை அருகே தனது சகாக்களுடன் நின்றுகொண்டு இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அருகில் இருந்தவர்களை டாஸ்மாக் கடைக்கு அனுப்பி, மது வாங்கி வரச் சொல்லியுள்ளார். அவர்கள், அங்கிருந்து சென்றதும் இரண்டு டூவீலரில் ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வசூல்ராஜா முகத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.
இதனால், அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டதால் நிலை தடுமாறிய வசூல்ராஜாவை, அந்த கும்பல் கழுத்து, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளது. இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசூல்ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, 5 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், உயிரிழந்த வசூல்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் தாலுகா போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். கொலை, வசூல் வேட்டையில் நடக்கும் கொலைகள் என காஞ்சிபுரம் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
* ரவுடி வசூல்ராஜாவின் க்ரைம் பிளாஷ்பேக்…
வசூல்ராஜா முதன்முதலில் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்து கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதரின் கூட்டாளியான பொய்யாகுளம் தியாகுவுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர், தியாகுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த நிவாஸ்கான் என்ற ரவுடியுடன் கூட்டணி சேர்ந்து வசூல்ராஜா குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வசூல்ராஜா தனியாக செயல்பட தொடங்கினார்.
மேலும், நிவாஸ்கான் கடந்த 2018ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரின் குற்றவியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வசூல்ராஜாவால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், கடந்த 2020ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சாமுண்டீஸ்வரி, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, ஒரு வருட காலத்திற்கு பொது அமைதியை காப்பதற்கு நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் நிர்ணயம் செய்து உத்தரவு பெறப்பட்டது.
ரவுடி வசூல்ராஜா படுகொலை தொடர்பாக, கொலையாளிகளை பிடிக்க காஞ்சிபுரம் தாலுகா போலீசார் 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், ரவுடி வசூல்ராஜா மீண்டும் காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், காஞ்சி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜாவை, அவரின் பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசி நிலை தடுமாறச்செய்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
The post காஞ்சியில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி பிரபல ரவுடி படுகொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.