×

மாநில அளவிலான வல்லுநர் குழு மூலம் ரூ.2,384.24 கோடியில் 12,960 பணிகள் நடக்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை : சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100வது மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை வல்லுநர் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு கோயில்களின் திருப்பணிக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தின் மூலம் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் திருப்பணிகளுக்கான ஆணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள் பதிவிறக்கம் செய்திடவும், திருப்பணிகளுக்கான மதிப்பீடுகளை விரைவாக தயார் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 99 கூட்டங்களில் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் ரூ.2,384.24 கோடி மதிப்பீட்டில் 12,960 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 2,679 கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது பெருமைக்குரிய சாதனையாகும்.

மாநில வல்லுநர் குழுவின் 100வது கூட்டம் நடைபெறும் இந்நாளில் தமிழ்நாடு மட்டுமன்றி, ஒன்றிய அளவில், உலகளவில் துறைக்கு பெருமை சேர்த்து தந்திருக்கும் மாநில வல்லுநர் குழு உறுப்பினர்களான பிச்சை குருக்கள், சந்திரசேகர பட்டர், முத்துசாமி, வசந்தி, ராமமூர்த்தி, சத்தியமூர்த்தி,தட்சிணாமூர்த்தி, அனந்த சயன பட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர், ராஜவேல், ஆர்.கோவிந்தன், ஜானகி ஆகியோருக்கு இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயில்களில் மணியோசையும், தீப, தூப ஆராதனைகளும், தேவார, திருவாசகங்கள் பாடப்பட்டும், மங்களகரமான நாட்களில் கலசங்களில் புனித நீர் விழ வேண்டும். அதற்கு உங்களுடைய பணி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ந.திருமகள், ஹரிப்ரியா, கவிதா, இணை ஆணையர்கள் ஜெயராமன், லட்சுமணன்,செ.மங்கையர்க்கரசி, வான்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநில அளவிலான வல்லுநர் குழு மூலம் ரூ.2,384.24 கோடியில் 12,960 பணிகள் நடக்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,P. K. Sekarpapu ,Chennai ,100th State-level Expert Group Meeting ,Office ,of the ,Commissioner of Hindu Religious Institutions ,Sekharbhabu ,B. K. ,Sekarbaba ,Dinakaran ,
× RELATED இந்து சமய அறநிலையத்துறை சார்பில்...