×

ஒன்றிய அமைச்சர் உருவபொம்மை எரிப்பு 11,200 திமுகவினர் மீது வழக்கு பதிவு: காவல்துறை நடவடிக்கை

சென்னை: தமிழக எம்பிக்கள் குறித்து அநாகரிகமாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் முன் அனுமதியின்றி போராட்டம் மற்றும் உருவபொம்மை எரித்ததாக 11,200 திமுகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் கல்வி மீதான விவாதத்தின் போது, திமுக தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதி தொடர்பாக பேசினார்.

அதற்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்து பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் மற்றும் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே ஒன்றிய அமைச்சரின் பேச்சை கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் திமுகவினருடன் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஒரு சில இடங்களில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 35 இடம் என மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் நேற்று முன்தினம் 125 இடங்களில் திமுகவினர் ஒன்றிய அமைச்சரை கண்டித்து பேராட்டங்கள் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் மொத்தம் பெண்கள் உள்பட மொத்தம் 11,200 திமுகவினர் கலந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையின் முன் அறிவிப்பு இன்றி இந்த போராட்டம் நடந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 11,200 திமுகவினர் மீதும் தடையை மீறி ஒன்று கூடுதல், இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒன்றிய அமைச்சர் உருவபொம்மை எரிப்பு 11,200 திமுகவினர் மீது வழக்கு பதிவு: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : DMK ,Union Minister ,Chennai ,Tamil Nadu ,Dharmendra Pradhan ,Parliament… ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?