×

மாசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். இங்கு, வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதால் நாளுக்குநாள் பக்தர் வருகை அதிகரித்து வருகிறது. தேவகுருவின் வழிகாட்டுதல்படி, இந்திரன் மங்கல வாரத்தில் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானைப் பூஜித்து இந்திராணியை மணந்தான். இது கல்யாண பிரார்த்தனை தலமாகவும் உள்ளது.

அதனால், 6 செவ்வாய்க்கிழமைகள் இக்கோயிலுக்கு வந்து மாலைகள் சாற்றி, முருகப்பெருமானை பூஜிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும், 5.30 மணிக்கு பால் அபிஷேகமும் நடைபெற்றது. காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பக்தர்களுக்கு பொங்கல், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post மாசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vallakottai ,Murugan ,Temple ,Masi Tuesday ,Sriperumbudur ,Subramania Swamy ,Arunagirinathar ,Krithigai ,Vallakottai Murugan Temple ,
× RELATED முருகன் கோயில் மண்டல பூஜை நிறைவு