×

மொரீஷியஸ் சென்றார் பிரதமர் மோடி: அதிபர் தரம் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீர், பனாரஸ் புடவை பரிசளிப்பு

போர்ட் லூயிஸ்: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று மொரீசியஸ் சென்றடைந்தார். நேற்று காலை மொரீசியசின் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். அவருடன் துணை பிரதமர் , மொரிசியஸ் தலைமை நீதிபதி, தேசிய சட்டமன்ற தலைவர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் விமான நிலையம் வந்து அவரை வரவேற்றனர். சுமார் 200 பிரமுகர்கள் விமான நிலையத்தில் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பிரதமருக்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் சார்பில் கீத் கவாய் எனப்படும் பீகார் கலாச்சார நிகழ்ச்சி மூலமாக பிரதமர் கவுரவிக்கப்பட்டார்.

ஓய்வுக்கு பின் பிரதமர் மோடி, சர்சீவூசாகூர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்றார். அங்கு மொரீசியஸ் நிறுவனர் சர் சீவூசாகூர் ராம்கூலமின் நினைவிடத்தில் இருநாட்டு தலைவர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான அனெரூத் ஜூக்னாத்தின் நினைவிடத்திலும் இருவரும் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பூங்காவில் பிரதமர் மோடி மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் தரம் கோகுலை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். அப்போது மகா கும்பமேளாவில் இருந்து எடுக்கப்பட்ட கங்கை நீர் உட்பட பல்வேறு பரிசுகளை பிரதமர் மோடி அதிபருக்கு வழங்கினார்.

மேலும் அதிபரின் மனைவிக்கு பனாரஸ் புடவையையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தள பதிவில், “பசுமை எதிர்காலத்திற்கான கூட்டு உறுதிபாட்டை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மொரீசியஸ் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரதமர் தனது கயானா பயணத்தின்போதும் மரக்கன்றுகளை நட்டார். இந்த முயற்சியின் கீழ் சுமார் 136 நாடுகளில் ஏற்கனவே 27500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மொரீசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

The post மொரீஷியஸ் சென்றார் பிரதமர் மோடி: அதிபர் தரம் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீர், பனாரஸ் புடவை பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Mauritius ,President ,Dharam Gokul ,Maha Kumbh ,Port Louis ,Sir Seewoosagur Ramgoolam International Airport ,Navin Chandra Ramgoolam ,
× RELATED இன்று டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி...