
விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஆடி கார் மோதி இளைஞர் பலியான சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் அரவிந்த் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான அரவிந்த் ரவிச்சந்திரன் ஆடி காரில் விழுப்புரம் சென்ற போது திண்டிவனம் அருகே விபத்துக்குள்ளானது. கடந்த 9ம் தேதி ஓங்கூர் பாலம் அருகே முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது அரவிந்த் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் நாராயணன் என்பவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய அரவிந்த் விழுப்புரம் செல்லாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி கிடைக்காத நிலையில் ஸ்கூட்டர் மீது மோதிய காரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஓங்கூர் சுங்கச்சாவடி சிசிடிவியை ஆய்வு செய்ததில் அரவிந்த் கார் விழுப்புரம் நோக்கி சென்ற உடனே சென்னை திரும்பியது தெரிய வந்தது. தொலைபேசி மூலம் அரவிந்தை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்தனர்.
32 வயதான அரவிந்த் ரவிச்சந்திரனை ஒலக்கூர் காவல் நிலையம் வரவழைத்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அரவிந்த் ரவிச்சந்திரனின் ஆடி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post ஆடி கார் மோதி இளைஞர் பலி: தலைமறைவான ஐ.டி. ஊழியரை 48 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.
