×

வில்லிவாக்கம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் மூலதன நிதியின் கீழ், ரூ.1.48 கோடி மதிப்பில் புதிய கோசாலை மையம் அமைப்பதற்கான பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (11.03.2025) அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ஏரியில் ரூ.52.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.53.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் முன்னேற்றப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சி, வில்லிவாக்கம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு இந்த கோசாலை மையத்தில் பராமரிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியாக கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் கோசாலை மையமானது 200 மாடுகளைப் பராமரிக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.53.50 கோடி மதிப்பில் வில்லிவாக்கம் பகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக கண்ணாடிப் பாலம் இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு உள்விளையாட்டு அரங்கம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த வில்லிவாக்கம் பகுதியைச் சுற்றிலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த வில்லிவாக்கம் ஏரியின் நீர் வெளியேறுவதனால் தான். இந்த வில்லிவாக்கம் ஏரியின் கொள்ளளவு 10 ஆயிரம் எம்.எல்.டி. தற்பொழுது 12 இலட்சம் எம்.எல்.டி. நீர்த்தேக்கம் செய்வதற்கு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதலாக 600 கனஅடி நீரை சேமிக்கும் வகையில் புதிய குளம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் குறுகிய காலத்தில் முடிக்கப்படும். இந்த வில்லிவாக்கம் ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்த 261 குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 50 குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வரக்கூடிய நாட்களில் வழங்கப்படும்.சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் வில்லிவாக்கம் பகுதியில் ரூ.75 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 5 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

மனித உயிர்கள் மட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆங்காங்கு சுற்றித்திரிகின்ற கால்நடைகளுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி தருவதற்காக கோசாலை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் சாலைகளில் சுற்றித்திரிகின்ற பசுக்கள் மற்றும் எருதுகளுடைய கூடுதல் எண்ணிக்கை, சுகாதார சீர்கேடு மற்றும் ஆபத்து போன்ற சூழ்நிலை நிலவுவதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கவனத்தில் கொண்டு, இதற்காக கோசாலை மையங்கள் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.இதை நிறைவேற்றுகின்ற வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 1/2 ஏக்கர் பகுதியில் இன்று கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியாத நிலை ஏற்படும்.

கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கிற இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மையங்கள் அமைப்பதற்கு முழுமையாக அர்ப்பணித்திடும் உன்னதமான திட்டப் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள் . இந்தப் பணிகள் தொடரும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சிகளில், மேயர் திருமதி.ஆர்.பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றி அழகன், மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர் திரு.கூ.பி.ஜெயின், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் திருமதி ரேணுகா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி சுதா தீனதயாளன், திரு.செம்மொழி, மண்டல அலுவலர் திரு.சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சாரத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வில்லிவாக்கம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbhabu ,Kosale ,Centre ,Williwakkam ,Chennai ,Minister of ,Hinduism ,and Social Affairs ,Shri ,Khosale ,Municipal Corporation of ,Sivasakti Nagar ,B. K. Sekarbaba ,Sekharbhabu ,Khosale Centre ,Williwakam ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவையில் வினா – விடை...