*ஜோதிடர் கைது
பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே, கணவனின் அடி, உதை தாங்க முடியாமல் மனமுடைந்த பெண் மற்றும் 2 மகள்கள் எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக ஜோதிடரான கணவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜன்(42). ஜோதிடரான இவரது மனைவி புவனேஸ்வரி(35). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர். ஜோதிடர் பூபதி ராஜனுக்கு தீராத மதுப்பழக்கம் உள்ளது. இதனால், தினசரி குடித்து விட்டு வந்து, மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த 6ம் தேதி இரவு, போதையில் வந்த பூபதிராஜா, மனைவியுடன் சண்டையிட்டு அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்துள்ளார். பின்னர், மனைவி, குழந்தைகளை பார்த்து, உயிரோடு வாழ வேண்டாம், செத்து விடுங்கள் என கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மணமுடைந்த புவனேஸ்வரி, தனது 2 குழந்தைகளுக்கும், உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார்.
அடுத்த நாள் காலை, நீண்ட நேரம் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அருகில் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, புவனேஸ்வரி உள்ளிட்ட மூவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து புவனேஸ்வரி, பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில், மனைவி, மகள்களை தற்கொலைக்கு தூண்டிய ஜோதிடர் பூபதிராஜாவை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளி பூபதிராஜாவை, 15 நாட்கள் காவல்படுத்த உத்தவிட்டார்.
The post பள்ளிபாளையம் அருகே கணவன் டார்ச்சரால் 2 மகள்களுடன் எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்ற தாய் appeared first on Dinakaran.
