×

குமரி அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள்

*கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள் தொடர்பாக கர்ப்பிணி தாய்மார்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.

குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கான பேறுகாலத்தில் தேவைப்படும் முன் கவனிப்பு, பிரசவம், பிரசவ கால பின் கவனிப்பு உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சேவைகள் உட்பட அனைத்து வசதிகளும் பெற்று 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு மற்றும் ராஜாக்கமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 24 கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கும், தக்கலை வட்டாரத்தை சேர்ந்த 17 கர்ப்பிணித் தாய்மார்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கும், மேல்புறம் வட்டாரத்தை சார்ந்த 15 கர்ப்பிணித் தாய்மார்கள் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், தோவாளை வட்டாரத்தை சார்ந்த 5 கர்ப்பிணித் தாய்மார்கள் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கும், திருவட்டார் வட்டாரத்தை சார்ந்த 3 கர்ப்பிணித் தாய்மார்கள் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கும் வருகை தந்து மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் செய்து அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளை குறித்து அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு மகப்பேறு மருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவக்கல்லூரி முதல்வர், மகப்பேறு துறைத்தலைவர் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் முதலானோர் அடங்கிய குழுவினர் மருத்துவக்கல்லூரிக்கு வந்த கர்ப்பிணித் தாய்மார்களுடன் உரையாடினர்.

அங்கு வழங்கப்படும் சேவைகளான மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவம், ஸ்கேன் வசதி, பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, 24 மணிநேர வெந்நீர் வசதி போன்றவை நேரடியாக காண்பிக்கப்பட்டது.

இலவசமாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் மாவட்ட சுகாதார அலுவலரால் விளக்கிக் கூறப்பட்டு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும் அன்றாட கர்ப்ப கால சிகிச்சைகளுக்காக ஏற்படும் கூடுதல் செலவுகளைத் தவிர்த்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான சேவைகளை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்தி, அவர்கள் பிரசவத்தை அரசு மருத்துவமனைகளிலே திட்டமிட வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குமரி அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள் appeared first on Dinakaran.

Tags : Kumari ,government ,Nagercoil ,Kumari district ,Kumari District News Public Relations Office ,Kumari district… ,Kumari government ,
× RELATED குமரி மருத்துவ கல்லூரியில்...