×

விருத்தாசலம் பகுதியில் முறைகேடாக இணைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு

* விதியை மீறினால் கடும் நடவடிக்கை

* விருத்தாசலம் நகராட்சி அறிவிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை வரி வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் 1.80 கோடி ரூபாய் அளவிற்கு குடிநீர் வரி பாக்கி உள்ளது.

இதனை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் கடந்த இரண்டு வருடமாக 10 ஆயிரத்து 900 ரூபாய் குடிநீர் வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் கடந்த 7ம் தேதி அன்று அவரது வீட்டில் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இதனால் 5 ஆயிரம் ரூபாயை செலுத்தி விட்டு மீதி பணத்தை ஓரிரு நாட்களுக்குள் நகராட்சியில் கட்டுவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று வரை பாக்கி தொகையை கட்டாமல் இருந்து வந்த நிலையில் வரிவசூல் செய்வதற்காக அவரது வீட்டிற்கு நேற்று வருவாய் ஆய்வாளர் ஷகிலா, வருவாய் உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் நகராட்சியினர் சென்றனர்.

அப்போது அவர் வழக்கம்போல் குடிநீர் இணைப்பை இணைத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வரி பாக்கியை செலுத்திய பிறகுதான் குடிநீர் இணைப்பை பொருத்த வேண்டும், அதுவும் நகராட்சி பணியாளர்கள் மூலம் தான் பொருத்த வேண்டும் என எச்சரித்ததுடன், அதிரடியாக அந்த குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதேபோல் பொதுமக்கள் வரியை செலுத்தாமல் யாரும் முறைகேடாக குடிநீர் இணைப்பை பயன்படுத்த கூடாது என எச்சரிப்பு விடுத்ததுடன் விரைவில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரி பாக்கிகளையும் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

The post விருத்தாசலம் பகுதியில் முறைகேடாக இணைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhachalam ,Virudhachalam Municipality ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி