*விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு : சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்களால் ஆடுகள் பலியாகும் சம்பவத்தை தடுக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க பலியான ஆடுகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆடுகள் வளர்ப்பு என்பது பாரம்பரிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. ஆடுகள் வளர்ப்பு இறைச்சி, பால், கம்பளி தயாரிக்க பயன்படுவதால் மாற்று வருவாயை ஈட்ட வழி வகை உள்ளதால், மக்களும் விரும்பி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பட்டிகளில் பாதுகாப்பாக வளர்க்கும் ஆடுகளை தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து, ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சிக்கோவில், நசியனூர், வில்லரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தெரு நாய்களால் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. இதில், சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வளர்த்த 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் தெரு நாய்களால் உயிரிழந்தன.
மேலும் 5 ஆடுகள் உயிரிழப்பு: சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலையில் எல்லக்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (65) என்பவர், அவரது வீட்டின் அருகே பட்டி அமைத்து 27 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் கேட்டு, சுப்பிரமணியின் குடும்பத்தினர் ஆட்டுப்பட்டிக்கு சென்ற போது, பட்டி சாய்ந்தும், பட்டிக்குள் இருந்த 5 ஆடுகள் இறந்த நிலையிலும், 3 ஆடுகள் குடல்கள் வெளியே தெரியும் வகையிலும் உயிருக்கு போராடி கொண்டிருந்தன.
ஆட்டு பட்டியின் கயிற்றை தெரு நாய்கள் கடித்து, பட்டியை சாய்த்து ஆடுகள் பயந்து வெளியே ஓடும்போது, தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுப்பாளையம் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து, நாய்கள் கடித்து காயம்பட்ட ஆடுகளுக்கு சிசிக்சை அளித்தார்.தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்படுமா?:
இது குறித்து தெரு நாய்களால் ஆடுகளை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தெரு நாய்கள் பட்டியில் வளர்க்கும் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. ஆடுகள் பலியாகும் சம்பவத்தை தடுக்கவும், பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஊராட்சி, பேரூராட்சி, தாசில்தார், கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக தெரு நாய்களை பெயரளவில் பிடித்து செல்லப்படுகின்றன.
ஆனால், ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் சிக்கவில்லை. இதனால், தான் ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. எனவே, தெரு நாய்களிடம் இருந்து ஆடுகளை பாதுகாக்க இரவு நேரத்தில் சுற்றும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் ஆடுகளை இழந்தவர்களுக்கு விரைவாக அரசிடம் இருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு முன்மொழிவு:
இது குறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:பேரிடர் காலங்களில் கால்நடைகளான ஆடு, மாடு போன்றவை பலியானால் அரசு மூலம் இழப்பீடு வழங்கப்படும். நாய்களால் பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க அரசு வழிகாட்டுதல் இல்லை. இதனால், மாவட்ட கலெக்டர் மூலம் நாய்களால் ஏராளமான ஆடுகள் பலியாகி, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் அரசு மூலம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு முதல்வருக்கும், அரசின் தலைமை செயலாளருக்கும் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, அதற்கான பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டதும், ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்திட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஆடுகளை வேட்டையாடும் நாய்களை பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் அப்பணியும் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்.
The post சென்னிமலையில் தொடர்ந்து பலியாகும் ஆடுகளை பாதுகாக்க இரவில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்படுமா? appeared first on Dinakaran.