- காஞ்சி வரதராஜப்பெருமாள்
- ஆண்டு
- தெப்போற்சவம் விழா
- டென்னேரி ஏரி
- Walajabad
- தென்னேரி தாதசமுத்திரம்
- தென்னேரி
- காஞ்சிபுரம்
- தின மலர்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரியில் காஞ்சி வரதராஜ பெருமாள் 100வது ஆண்டு தெப்போற்சவ விழா நடைபெற்றது. இதில் 50 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்திலுள்ள தென்னேரி தாதசமுத்திரம் என்று அழைக்கப்படும் தென்னேரி ஏரியில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் தேவராஜ சுவாமி என்னும் வரதராஜ பெருமாள் தெப்பல் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 8ம் தேதி இரவு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு தென்னேரி கிராமத்திற்கு நேற்று முன்தினம் காலை எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மண்டபத்தில் திருமஞ்சன அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க தென்னேரி கிராமத்தைச் சுற்றியுள்ள அய்மன்சேரி, திருவாங்கரணை, குண்ணவாக்கம், அகரம், உள்ளிட்ட கிராமங்களில் வீதி உலா சென்று மீண்டும் தென்னேரி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, தென்னேரி ஏரியில் வண்ண, வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பலில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி ஏரியில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர தீப ஆராதனைகள் காண்பித்து கோவிந்தா, கோவிந்தா என பக்தியில் எழுப்பும் கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது.
இந்த தெப்பல் திருவிழாவை காண காஞ்சிபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், அகரம், அய்மஞ்சேரி, திருவாங்கரணை, குண்ணவாக்கம், தென்னேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தெப்பல் உற்சவத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.
* தென்னேரி தெப்ப உற்சவத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதராஜுலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாபு, ஏரி பாசன சங்க தலைவர் பானுநாகப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வினோபாஜி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சத்யா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் விழா குழுவினர் கலந்துகொண்டனர்.
The post வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரியில் காஞ்சி வரதராஜ பெருமாள் 100வது ஆண்டு தெப்போற்சவ விழா: 50 கிராமமக்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.