×

வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு: பொறுப்பற்ற நடத்தை என நட்டா விமர்சனம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று வாக்காளர் பட்டியல் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, வில்சன், சிபிஐ எம்பி சந்தோஷ்குமார், எம்டிஎம்கே எம்பி வைகோ, சிபிஐ எம்பி சுனீர் உள்ளிட்டோர் தென்மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி இருந்தனர். அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ், விதி 267ன் கீழ் அவசர விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக வழங்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக அவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள். தங்களது எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சிகள் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய மாநிங்களவையின் அவை தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜேபி நட்டா, \\”எதிர்கட்சிகளின் இந்த செயல் பொறுப்பற்ற நடத்தையாகும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் விதிகள் குறித்து மீண்டும் ஆய்வுக்கு செல்ல வேண்டும். பிரச்னைகள் குறித்து விவாதிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. அரசு கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ, விவாதத்தில் ஈடுபடவோ விரும்பவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் உள்ள அரசு எதை பற்றியும் விவாதிப்பதற்கு தயாராக உள்ளது.

ஆனால் அவையில் விவாதங்களுக்கு சில விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. அடுத்த பத்து நாட்களில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எம்பிக்கள் தங்களது பிரச்னைகளை எழுப்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குறுகிய கால விவாதம் மற்றும் நீண்ட கால விவாதங்களுக்கு தனித்தனி ஏற்பாடு உள்ளது. எதிர்க்கட்சி எம்பிக்கள் விதிகளை படித்து விவாதம் செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற நடத்தையாகும். இது நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் முயற்சியாகும். அரசு எதையும் விவாதிப்பதற்கு தயாராக உள்ளது ” என்றார்.

* கேள்வி நேரம் சுமூகமாக நடக்க வேண்டும்
அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து உறுப்பினர்களும் கேள்வி நேரத்தை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்கும் கூட்டத்தொடரில் ரயில்வே, விவசாயம் மற்றும் ஜல் சக்தி உள்ளிட்ட அமைச்சகங்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்படும்” என்றார்.

* ஆஷா பணியாளர் விவகாரத்தை எழுப்பிய காங்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆஷா பணியாளர்களின் போராட்டத்தை எழுப்பினார். தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் ஆஷா பணியாளர்களின் ஒரு மாத போராட்டம், அவர்களுக்கு வழங்கப்படும் மோசமான ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் மறுக்கப்படுவது உள்ளிட்டவற்றை எழுப்பினார்கள்.

* சைபர் குற்ற வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம்
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பேசிய பாஜ எம்பி சஞ்சய் சேத், ஏராளமான மக்கள் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் கட்டண முறைகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததால் அவர்களில் பலர் சைபர் மோசடிகளால் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த வருமானத்தை சில நொடிகளில் இழக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒரு நிதியை அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு: பொறுப்பற்ற நடத்தை என நட்டா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Nadda ,New Delhi ,Congress party ,DMK ,Trichy Siva ,Wilson ,CBI ,Santosh Kumar ,MDMK ,Vaiko ,Suneer… ,Dinakaran ,
× RELATED வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை