*வெளிநாட்டு பறவைகள் வருகை குறைவு
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில், பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில், வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வன உயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயர்வு(மைக்ரேஷன்), பறவைகளின் நிலை குறித்து அறிந்துகொள்ளும் வகையில், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட கணக்கெடுப்ப பணி நேற்று மாவட்டத்தில் உள்ள 20 ஏரி, குளங்களில் நடைபெற்றது.
மாவட்ட வன அதிகாரி கலாநிதி தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வனச்சரகர் பழனிசாமி மற்றும் வனவர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஈர நிலங்கள் என்றழைக்கப்படும் ஏரி, குளங்களில் நடைபெறும் கணக்கெடுப்பின்போது உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகளின் வரத்து போன்றவை குறித்து அறியமுடியும்.
நாமக்கல் வனச்சரகத்தில் பழையபாளையம், சரப்பள்ளி, நாச்சிப்புதூர், இடும்பன் குளம், கஸ்தூரிப்பட்டி ஆகிய ஏரிகளிலும், ராசிபுரம் வனச்சரகத்தில் ஏ.கே.சமுத்திரம், கண்ணூர்பட்டி, புதுச்சத்திரம், தும்பல்பட்டி ஆகிய ஏரிகளிலும், ஜேடர்பாளையம், பருத்திப்பள்ளி, உமயம்பட்டி, இலுப்பிலி, கேனேரிப்பட்டி, ஓசக்காரனூர், குருக்கபுரம், புத்தூர் ஆகிய ஏரிகளிலும், கொல்லிமலை வனச்சரகத்தில் வாசலூர்ப்பட்டி ஏரி உள்பட 20 இடங்களிலும் நேற்று ஈர நிலப்பறவை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பறவைகளின் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று(நேற்று) கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன்மூலம் பறவைகளின் வாழ்விடத்தில் உள்ள குறைபாடுகள், பறவைகளுக்கான இடர்பாடுகள் போன்றவற்றை கண்டறிய முடியும். தூசூர் ஏரியில் நேற்று 32 வகையான பறவைகள் வந்து சென்றதை கண்டறிய முடிந்தது.
தற்போது வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைவாக உள்ளது. ஈர நிலத்தில் வசிக்கும் பறவைகளின் இருப்பிடம் பெரும்பாலும் ஏரி, குளங்களாக தான் இருக்கும். பறவைகளின் வரத்து குறைவாக இருந்தால், எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணிக்காக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இன்று(நேற்று) 20 இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். 2ம் கட்டமாக வனப்பகுதியில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது. நாமக்கல் வனச்சரகத்தில் உள்ள சேந்தமங்கலம், ஜம்பூத், எருமப்பட்டி, தலமலை வடக்கு, நெட்ட வேலம்பட்டி, புளியஞ்சோலை, ராசிபுரம், கொல்லிமலை, நாமக்கல் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் என மொத்தம் 26 இடங்களில் வனப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது என்றனர்.
The post மாவட்டத்தில் 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.